மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

88 0

தாங்கள் விரும்பிய மதமொன்றை பின்பற்றி ஒழுகுவதற்கு யாருக்கும் உரிமை இருக்கின்றபோதும் ஏனையவர்களின் மதங்களை அகெளரவப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. மத நல்லிணக்கத்துக்கு தடை ஏற்படும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நிலை நாட்டுவோம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

நீதி அமைச்சில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பல்லின பல்மத. பல மொழி பேசும் மக்கள் இருக்கும் நாடு என்றவகையில் எமக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியமாகும். அரசியலமைப்பில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

என்றாலும் அந்த சுதந்திரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தவேண்டியது இன மற்றும் மத ஐக்கியத்துக்கு பாதிப்பு இல்லாத வகையிலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் எந்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் நாங்கள் செயற்பட வேண்டும்.

மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நபர்களுக்கு வழங்க முடியுமான  தண்டனை தொடர்பாக தண்டனைச்சட்டத்தில்  தெளிவாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  வெறுப்பூட்டும் கருத்து தெரிவித்து வருபவர்களுக்கு எதிராக 10 வருடம் வரை சிறை தண்டனை வழங்க முடியும். அதனால் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துபவர்கள் இருக்குமானால் நாங்கள் அது தொடர்பில் நடவடிக்கை செயற்படுவோம். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டுவோம்.

மேலும் உண்மையை ஆய்வு செய்யும் புதிய பொறிமுறையொன்யை தயாரிப்பதற்கு நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அதற்கான முறைமை ஒன்றை தயாரிப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பிரகாரம் உண்மையை ஆய்வு செய்வதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவோம்.

தத்தமக்கு விரும்பிய மதத்தை பின்பற்றி ஒழுகுவதற்கு உரிமை இருக்கிறது. வேறு ஒருவர் பின்பற்றி ஒழுகும் மதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் அவ்வாறு செயற்பட்டால் தராதரம் பார்க்காமல் செயற்படுவோம்.

இலங்கைக்குள் பல்லாயிரம் வருடங்களாக மக்கள் ஐக்கியமாக செயற்பட்டனர். அந்த ஐக்கியத்துக்கு பாதிப்பாகும் விடயங்களை மேற்கொள்ள இடமளிக்க முடியாது.  இலங்கை இராஜ்ஜியத்தை வீழ்த்த சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது தெளிவாகும்.

எனவே ஊடக பயன்பாட்டை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம். சமூக ஊடகங்களை பயன்படுத்தவேண்டியது, சமூகத்துக்கு பிரயோசமான வகையிலாகும். அதனால் மதங்களுக்கு பாதிப்பு, அகெளரவம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம். அண்மைக்காலங்களில் இடம்பெற்றுவரும்  மத விராேத, வெறுப்பூட்டும் பேச்சு திட்டமிடப்பட்ட செயல் என தற்போது தெரியவந்திருக்கிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உதவி கிடைப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது என்றார்.