கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.
செவ்வாய்கிழமை (30) கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்திர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
செந்தில் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை கூடிய விரைவில் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த கல்வி அமைச்சர்,அதற்கு முதல் கட்டமாக மூன்று மாதக்காலத்திற்குள் பட்டதாரி ஆசிரியர்கள், கல்வியற் கல்லூரியில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்தார்.
கல்வி அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,ஆளுநரின் சிரேஸ்ட ஆலோசகர் டாக்டர் அமல் அரசடி சில்வா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.