இந்து சிறுமியை மதம்மாற்றி திருமணம் செய்த பாகிஸ்தானியர்

100 0

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்திச் சென்று இஸ்லாம் மதத்துக்கு மாற்றி திருமணம் செய்த நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிகழ் வுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அவளது வீட்டிலிருந்து 55 வயது மிக்க முஸ்லிம் நபர் ஒருவர் கடத்திச் சென்றார் என்றும், அவர் அந்தச் சிறுமியை கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்கு எதிராக இந்திய தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை இன மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்களது அடிப்படை உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தானில் 124 கட்டாய மதமாற்ற திருமணங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமை குழு கூட்டத்தில், பாகிஸ்தானில் நிகழும் கட்டாய மதமாற்ற திருமண நிகழ்வுகள் குறித்து இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.