கொவிட்19 ஆய்வுகூடக் கசிவுக் கொள்கையை நிராகரிக்க முடியாது: சீனாவின் சிரேஷ்ட விஞ்ஞானி

94 0

ஆய்வுகூடத்திலிருந்து கொவிட்19 ரைவஸ் கசிந்திருக்கலாம் என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என சீனாவின் சிரேஷ்ட விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் ஜோர்ஜ் காவோ கூறியுள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வைரஸியல் மற்றும் நீர்ப்பீடனவியல் பேராசிரியரான ஜோர்ஜ் காவோ, சீனாவின் நோய்க் கட்டுப்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரகாக பதவி வகித்தவர்.

கொவிட்19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய அவர், அவ்வைரஸின் மூலத்தை கண்டறிவதற்கான பணிகளிலும் ஈடுபட்டார்.

கடந்த வருடம் சீன தொற்றுநோய் கட்டுப்பாட்டு மத்திய நிலையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், சீனாவின் தேசிய இற்ககை விஞ்ஞான மன்றத்தின் உப தலைவராக விளங்குகிறார்.

சீனாவின் வுஹான் நகரிலுள்ள வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்தே கொவிட்19 வைரஸ் கசிந்தது என சிலர் கூறுகின்றனர். ஆனால், சீன அரசாங்கம் அதை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது.

ஆனால், பிபிசிக்கு அளித்த செவ்வியில் பேராசிரியர் ஜோர்ஜ் காவோ, “நீங்கள் எப்போதையும் எதையும் சந்தேகிக்க முடியும். அது விஞ்ஞானம். எதையும் நிராகரிக்காதீர்கள்”எனக் கூறியுள்ளார்.

ஆய்வுகூடத்திலிருந்து இவ்வைரஸ் கசிந்திருக்கலாம் எனக் கூறப்படுவது குறித்து சீனா அரசாங்கம் விசாரணையொன்றை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விசாரணையில் தனது திணைக்களம் சம்பந்தப்படவில்லை எனவும், மேற்படி ஆய்வுகூடத்தில் தவறு எதுவும் நடந்ததாக நிபுணர்கள் கண்டறியவில்லை எனவும் ஜோர்ஜ் காவோ கூறியுள்ளார்.

இதேவேளை, ஆய்வுகூட கசிவுக் கொள்கையானது சீன எதிர்;ப்புச் சக்திகளால் உருவாக்கப்பட்டது என பிரிட்டனிலுள்ள சீனத் தூதரகம், பிபிசியிடம் தெரிவித்துள்ளது.