பழைய முறைமையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை

109 0

மாகாணசபைத் தேர்தலை பழயை முறைமையின் கீழ் நடத்துவது தொடர்பில் அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை.

கட்சி ரீதியாக தெரிவிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படமாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்தின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

குறித்த பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவரால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த விடயம் தொடர்பில் செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அது தொடர்பில் கலந்துரையாடவுமில்லை.

பழைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் சுமந்திரனால் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளமை கட்சி சார்ந்த விடயமாகும்.

இவ்வாறான கட்சி சார் விடயங்கள் தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்படுவதில்லை என்றார்.

தற்போதைய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே பெரும்பான்மை கொண்ட கட்சியாகக் காணப்படுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ள கருத்து சிக்கலை தோற்றுவித்துள்ளது.

நிதி நெருக்கடியைக் காரணமாகக் காண்பித்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்ற நிலையில் , மாகாணசபைத் தேர்தலை நடத்துவற்கு ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.