சீனாவில் பள்ளிவாசலொன்றின் ஒருபகுதியை இடிக்க முற்பட்டதால் மோதல்கள்: பலர் கைது

84 0

சீனாவிலுள்ள பள்ளிவாசலொன்றின் ஒரு பகுதியை இடிப்பதற்கு உள்ளூர் அதிகாரிகள் திட்டமிட்டதால் ஏற்பட்ட மோதல்களையடுத்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுனான் மாகாணத்தின் நாகு நகரில் கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கணிசமான முஸ்லிம்களைக் கொண்ட நாகு நகரிலுள்ள,  13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாஜியாங்  பள்ளிவாசலின் மாடத்தையும் 4 மினார்களையும்  இடிப்பதற்கு அதிகாரிகள் சனிக்கிழமை திட்டமிட்டனர்.

அதையடுத்து பெரும் எண்ணிக்கையான மக்கள் பள்ளிவாசலுக்கு வெளியே திரண்டனர். பொலிஸாருக்கும் உள்ளுர் மக்களுக்கும் இடையில் மோதல்களும் ஏற்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதனால், பலர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்கார்ரகளை எதிர்வரும் ஜூன் 6 ஆம்  திகதிக்கு முன்னர் சரணடைய வேண்டுமென உள்ளூர் பொலிஸார் கூறியுள்ளனர். சரணடைபவர்களுக்கு கருணை காட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாஜியாங் பள்ளிவாசல்  நாகு நகரின் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. அண்மைக்காலத்தில் பல மினார்கள் மற்றும் புதிய மாடமொன்று நிர்மாணிக்கப்பட்டன.

எனினும், 2020 ஆம் ஆண்டு நீதிமன்றமொன்று அளித்த தீர்ப்பில் புதிய நிர்மாணங்கள் சட்டவிரோதமானவை என அறிவித்ததுடன், அவற்றை அகற்றுமாறும் உத்தரவிட்டது.