கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தின் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இருக்கும் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாக கடலரிப்பினால் அழிந்து செல்கிறது. அக்கிராம மக்களின் குடியிருப்புக்கள் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் கடலுக்குள் சங்கமித்தும் பல கட்டிடங்கள் கடலில் மூழ்கியவாறும் உள்ளன.எனவே உடனடியாக ஒலுவில் கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரில் சென்று பார்வையிட வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பின் பின்னர் ஒலுவில் கிராமம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு கடல் குடியிருப்புக்களை நோக்கிச் செல்வதால் அக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகவும் அச்சத்தில் இருக்கிறார்கள், அக்கிராமத்தில் அதிகமானோர் கடல் தொழிலையே ஜீவனோபாயமாக செய்து வந்தனர். ஆனால் இக்கடலரிப்பினால் அக்கிராம மீனவர்களும் தொழில் செய்ய முடியாத இக்கட்டான நிலைமைக்குள்ளாகி மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் குடியிருப்புக் காணிகள் கடலுக்குள் சென்று விட்டன. பல கட்டிடங்கள் இன்னும் கடலுக்குள் சங்கமித்த வண்ணமுள்ளன. இன்னும் தாமதமானால் மிகவும் மோசமான விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
எனவே குறித்த ஒலுவில் கிராமத்துக்கு ஜனாதிபதி நேரடியாகச் சென்று பார்வையிட்டு உடனடியாக அந்த மக்களுக்கான உதவிகளைச் செய்யவதற்கும் கடலரிப்பைத் தடுக்கும் நடவடிக்கையை மும்முறமாக மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.