குற்ற வழக்குகளில் சிக்கி வருவதால் பாஜகவில் உள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகளைக் கண்காணிக்க மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாரதிய ஜனதாவில் 20-க்கும் மேற்றப்பட்ட அணிகள் உள்ளன. இந்த அணியின் நிர்வாகிகள் பலர் அண்மைக்காலமாக அதிகளவிலான குற்ற வழக்குகளில் சிக்கி வருகின்றனர்.
இதனால் பாஜகவில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் அதிகளவில் இருப்பதாக சமூக வலை தளங்களில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இதையடுத்து பாஜகவில் அணிப்பிரிவு நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்பு பொதுசெயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் சமீபத்தில் கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் காணொலி வாயிலாகப் பேசினர்.
அப்போது அண்ணாமலை பேசியதாவது: அடுத்த 10 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. அதற்குள் கிளைத் தலைவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். கர்நாடகாவில் கிளைத் தலைவர்களின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு விருந்து அளிக்கப்பட்டது.
அதேபோல் தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டும். மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை மையமாக வைத்தே வாக்குகள் கேட்கப்போகிறோம். பல்வேறு போட்டிகளை நடத்திப் பொதுமக்களை உற்சாகப்படுத்த வேண்டும்.
மோடி திரைப்படம்: திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து மோடியின் திரைப்படத்தை திரையிடுவது, மத்திய அரசுப் பயனாளிகள் சந்திப்பு, கருத்தரங்கு, பட்டிமன்றம், சிறப்பு செங்கோல் மாநாடு, பிரதமரின் பேச்சுகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அணிப்பிரிவு நிர்வாகிகளுக்கு பல்வேறு பணிகளை வழங்க வேண்டும். மரக்காணம், விழுப்புரம் சம்பவங்களில் அணிப்பிரிவு நிர்வாகிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இதனால் அணிப்பிரிவு நிர்வாகிகளைக் கண்காணிக்க வேண்டும். அவர்களின் செயல்பாடுகளை மாவட்டத் தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
25 எம்.பி.க்கள்: மத்திய அரசின் 9 ஆண்டுகாலச் சாதனைகளை மக்களிடம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும். 70 ஆண்டுகாலத் திராவிட ஆட்சியை அகற்ற வேண்டிய காலம் வந்துள்ளது.
இப்போது அதைச் செய்யாவிட்டால் மிகப் பெரிய சரித்திரப் பிழையைச் செய்ததாக ஆகும். தமிழகத்திலிருந்து 25 பாஜக எம்.பி.க்களை மக்களவைக்கு அனுப்பத் தயாராக வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.