மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மற்றும் நகைச்சுவை மேடைப் பேச்சாளர் நடாஷா ஆகிய இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு, கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்கனை சத்தாரதன தேரர் திங்கட்கிழமை (29) அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் முன்வைத்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனடிப்படையில் அவரை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்துக்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்தனர். இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணனிப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர் நடாஷா எதிரிசூரியவை சிங்கப்பூர் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பௌத்தம் மற்றும் கலாசாரத்தை அவமதிக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் வகையிலும் சந்தேகநபர் கருத்துகளை தெரிவித்ததாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்தது.
இதன்படி முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை பரிசீலித்த கோட்டை நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.