இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சனத்தொகையில் 17 வீதமானோர் மிதமானது முதல் தீவிரமானது வரையிலான உணவுப் பாதுகாப்பின்மையை தொடர்ந்து அனுபவித்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இது 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தைக் காண்பிக்கிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டம் (WFP) இணைந்து 2023 பெப்ரவரி – மார்ச் மாதங்களில் மேற்கொண்ட பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பாய்வுப் பணி (CFSAM) அறிக்கையின்படி, இலங்கையில் உணவுப் பாதுகாப்பு அனைத்து மாகாணங்களிலும் மேம்பட்டு வருகிறது. 3.9 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் 17 சதவீதம் பேர் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
இது கடந்த ஆண்டு ஜூன் – ஜூலையில் இருந்ததிலிருந்து கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைவடைந்துள்ளது.
கடந்த ஆண்டு தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்தவர்களின் எண்ணிக்கை 66,000 பேராக இருந்தது. இது தற்போது ஏறக்குறைய 10,000 பேராக குறைவடைந்துள்ளது.
உணவுப் பாதுகாப்பின் முன்னேற்றம், சிறந்த உணவு நுகர்வில் இருந்து உருவாகிறது. இதற்கு இப்பணி முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் காணப்பட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு மற்றும் அறுவடை காலத்தில் விவசாய சமூகங்களிடையே மேம்பட்ட வருமானம் ஆகியவை காரணமாக இருக்கலாம்.
இந்த நேர்மறையான போக்கு இருந்தபோதிலும், சில மாவட்டங்களில் குறிப்பாக கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவற்றில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகமாகவே உள்ளது.
பெருந்தோட்டத்துறையில் உள்ள தேயிலை தோட்ட சமூகங்களுக்குள்ளும் அவர்களது பிரதான வருமான மூலமாக சமுர்த்தி போன்ற சமூக உதவித் திட்டங்களை நம்பியிருக்கும் தினசரி கூலித் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்கள் மத்தியிலும் மிக உயர்ந்த அளவிலான தீவிரமான உணவுப் பாதுகாப்பின்மை கண்டறியப்பட்டது.
2022/23இல் இரண்டு முக்கிய பயிர் பருவங்களில் அரிசி மற்றும் மக்காச்சோளம் உள்ளிட்ட தானியங்களின் உற்பத்தி 4.1 மில்லியன் தொன்களாக அதாவது, கடந்த ஐந்தாண்டு சராசரியை விட 14 சதவீதம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
போதுமானளவு உரங்கள் விநியோகிக்கப்படாமை மற்றும் அத்தியாவசிய பொருள் உள்ளீடுகளின் கட்டுப்படியாகாத தன்மை ஆகியவற்றால் ஏற்படும் மோசமான தாவர ஊட்டச்சத்து என்பன இதற்கான காரணங்களாகும்.
எவ்வாறாயினும், சிறு விவசாயிகளுக்கு பலதரப்பு மற்றும் இருதரப்பு நன்கொடை நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதி மூலம் அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய உரங்கள், உற்பத்தியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சமீபத்தில் அறுவடை செய்யப்பட்ட 2022-23 பெரும் போகத்தில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது 2022 சிறுபோக உற்பத்தித்திறனுடன் ஒப்பிடுகையில் 12% அதிகமானதாகும்.
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான FAOவின் பிரதிநிதி விமலேந்திர ஷரன் CFSAM அறிக்கையின் கண்டறிதல்கள் பற்றி குறிப்பிடுகையில்,
“பயிர் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பாய்வுப் பணி (CFSAM) அறிக்கையானது இலங்கையின் உணவு அமைப்பு முறைகளில் நிலவும் பாதிப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவரும்.
இந்த அறிக்கையும் அதன் கண்டுபிடிப்புகளும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விவசாயத்திறனை வலுப்படுத்துவதற்கும், பொருளாதார நெருக்கடியால் விகிதாசார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் இடர்களைக் குறைப்பதற்கும் கூட்டாகச் செயற்பட வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் பட்டினியை இல்லாதொழித்தல் ஆகிய இலக்குகளை அடைவதற்கான அவர்களின் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்க FAO உறுதியுடன் உள்ளது” என்றார்.
இதேவேளை, “பல மாத சவால்களுக்குப் பின்னர், இறுதியாக நாட்டின் உணவுப் பாதுகாப்பில் முன்னேற்றத்தை கண்டுள்ளோம். ஆனால், செய்யவேண்டியது இன்னும் அதிகம் இருக்கிறது. 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பணத்தை கடனாகப் பெறுவது மற்றும் கடனுக்கு உணவைப் பெறுவது உள்ளிட்ட உணவுத் தேவையை நிறைவேற்ற எதிர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
உணவுப் பாதுகாப்பற்றவர்கள் என அடையாளம் காணப்பட்ட மக்களுக்கு உணவுப் படி மற்றும் பண உதவிகளை வழங்குவதற்காக கடந்த ஆண்டு WFP தொடங்கிய அதன் அவசர நடவடிக்கையை மேலும் தொடரும்” என WFPஇன் இலங்கைக்கான பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான அப்துர் ரஹீம் சித்திக் கூறினார்.