வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வர்த்தகர் ஒருவரின் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாகனம் மூலம் கொழும்பு, கிராண்ட்பாஸுக்கு எடுத்து வரும் வழியில் அவரை பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத சிலரால் துப்பாக்கி முனையில் வர்த்தகரை அச்சுறுத்தி பொருட்கள் அனைத்தும் கொள்ளையிட்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வர்த்தகரின் உதவியாளராகப் பணியாற்றிய பெண்ணொருவர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டு வழிநடத்தியதாக கட்டுநாயக்க பொலிஸார் பின்னர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனடிப்படையில் கொள்ளைக்கு திட்டமிட்ட பெண் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களுடன் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.