பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு கோருவது பழக்கமாகி விட்டது

82 0

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு பின்னர் மன்னிப்பு கோருவது தற்போது பழக்கமாகி விட்டது. அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வகையில் புத்த சாசனத்துக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.

தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு ஊடாக கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படும் என தெரிவுக்குழுவின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான  அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் தான் புத்தசாசனத்துக்கு எதிராக கருத்துரைப்பவர்கள் பாதுகாக்காக இருக்கிறார்கள். பிற நாடுகளில் இவ்வாறான தன்மை கிடையாது. உயிருடனும் வாழ முடியாது.

பௌத்த மதத்துக்கும்,புத்தசாதனத்துக்கும் எதிரான கருத்துக்களை ஒருதரப்பினர் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கிறார்கள்.

பகிரங்கமான முறையில் மத கோட்பாடுகளை அவமதித்து விட்டு பின்னர் சமூக வலைத்தளங்கள் ஊடாக மன்னிப்பு கோருகிறார்கள்.இது தற்போது பழக்கமாகி விட்டது.

காலி முகத்திடல் போராட்டத்துக்கு (அரகலய) பின்னரே புத்தசாசனத்துக்கு எதிரான கருத்துக்கள் தீவிரமடைந்துள்ளன. காலி முகத்திடலில் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட வெசாக், பொசன் உற்சவத்தில் கறுப்பு நிறத்தில் தோரணங்கள், பந்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளின் விளைவே தற்போது வெளிப்படுகின்றன.

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்தை ஒரு தரப்பினர் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் திட்டமிட்ட வகையில் புத்தசாசனத்துக்கு எதிரான செயற்பாடுகள் நாட்டின் முன்னெடுக்கப்படுகின்றன.

மதங்களை முன்னிலைப்படுத்தி குறிப்பிடப்படும் கருத்துக்கள் தொடர்பில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற தெரிவு குழு ஊடாக விசேட தீர்மானங்களை எடுக்க தீர்மானித்துள்ளோம். கடுமையான தீர்மானங்களை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.