இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் இப்போது இல்லை

133 0

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர் புதுடில்லிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தற்போது இந்தியாவுக்கு அரசியல் ரீதியான விஜயத்தை மேற்கொள்ளும் உத்தேசம் இல்லை என்றும் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பிரதிநிதிகள்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

அதனைத்தொடர்ந்து அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் கூட்டமைப்பு மீண்டும் இந்தியாவின் ஆதரவை நாடுமா என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுவந்த பின்னணியிலேயே கூட்டமைப்பின் பிரதிநிதிகள் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இருப்பினும் அதனை முற்றாக மறுத்திருக்கும் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, தற்போது இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் உத்தேசம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், இந்திய விஜயம் குறித்த திட்டம் எதுவுமில்லை என்றார்.

அதேவேளை இதுபற்றி ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணியின் பங்காளிக்கட்சியான ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனிடம் வினவியபோது, அவரும் அதனை மறுத்தார்.

மேலும் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு புதுடில்லியில் இருந்து உத்தியோகபூர்வ அழைப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்த திட்டம் எதுவும் இல்லை என்றார்.

அத்தோடு ஏற்கனவே புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிளவுபட முன்னரான தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்திருந்த போதிலும், அதற்கு கட்சியின் தலைவர் சம்பந்தன் ‘வரவில்லை’ எனக் கூறிவிட்டார் என்று சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், தற்போது இவ்விடயத்தில் இந்தியா பெருமளவுக்கு அக்கறை காண்பிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது புதுடில்லி விஜயம் குறித்துப் பேசியிருந்தாலும், அதுகுறித்து எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.