அசங்க குணவன்சவின் பெயரை அமைச்சர் அலி சப்ரியே முன்மொழிந்தார்

79 0

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபைத் தயாரிக்கும் பணிகளுக்குப் பொறுப்பாக அமைச்சர் அலி சப்ரியின் முன்மொழிவின் பிரகாரமே வணிகத்துறைசார் சட்டத்தரணி அசங்க குணவன்ச நியமிக்கப்பட்டதாகவும், இதன் பின்னணி குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அந்த ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்குப் பொறுப்பாக சர்வதேச பொருளியல் சட்டத்தில் சிறப்புத்தேர்ச்சிபெற்ற வணிகத்துறைசார் சட்டத்தரணியான கலாநிதி அசங்க குணவன்ச நியமிக்கப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் இணைந்ததாக ஸ்தாபிக்கப்படவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க செயலகத்தின் செயலாளர் நாயகமாக சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் எவ்வித பரிச்சயமும் அற்ற அசங்க குணவன்சவை நியமிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கும் அதேவேளை, இதுபற்றி நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் முறைப்பாடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் வினவியபோது, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு ஒருவர் தேவை என்ற காரணத்தினாலேயே அசங்க குணவன்ச நியமிக்கப்பட்டதாகவும் அவரது பின்னணி குறித்த விபரங்கள் தனக்குத் தெரியாது என்றும் பதிலளித்தார்.

அதுமாத்திரமன்றி சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தில் தேர்ச்சிபெறாத ஒருவர் உள்ளடங்கலாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை யார் தயாரித்தாலும் அதனை இறுதியாகத் தாமே பரிசீலிக்கப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அமைச்சர் அலி சப்ரியின் பரிந்துரையின் பிரகாரமே சட்டத்தரணி அசங்க குணவன்ச நியமிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் கேட்டபோது, அசங்க குணவன்சவின் பெயரை அமைச்சர் அலி சப்ரியே முன்மொழிந்ததாகவும் ஆனால் இதன் பின்னணி குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் பதிலளித்தார்.

இதுபற்றி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கேட்டறிய முற்பட்ட போதிலும், அவரைத் தொடர்புகொள்ளமுடியவில்லை.