பொலிஸ்காவலின் கீழான ராஜகுமாரியின் மரணம் : பொலிஸ் அதிகாரிகளைக் கைதுசெய்யுங்கள்

81 0

பொலிஸ்காவலின்கீழ் நிகழும் மரணங்கள் தொடர்பில் மீண்டும் கவனம் குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ள ராஜகுமாரியின் உயிரிழப்பு தொடர்பில் கடும் கண்டனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளைப் பணி இடைநிறுத்தம், பணி இடமாற்றம் செய்வதைவிடுத்து, அவர்களைக் கைதுசெய்து உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி நாடகத்தயாரிப்பாளரான சுதர்மா நெத்திகுமார என்பவரின் இல்லத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த 42 வயதான ராஜகுமாரி என்பவர் அண்மையில் பொலிஸ் காவலின்கீழ் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதர்மா நெத்திகுமாரவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாகக் கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட ராஜகுமாரி, பொலிஸ்காவலின்கீழ் உயிரிழந்துள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டமைக்கான பதிவுகள் எவையும் பொலிஸ் பதிவேட்டில் காணப்படாத நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதுடன் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் சட்டத்தரணியும் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவருமான சேனக பெரேரா, ‘முதலாவதாக ராஜகுமாரியின் கைது சட்டவிரோதமான முறையிலேயே இடம்பெற்றுள்ளது. அதேபோன்று பொதுமக்களைப் பாதுகாப்பதே பொலிஸாரின் கடமையாக உள்ள நிலையில், பொலிஸ்காவலின்கீழ் ஒருவர் உயிரிழப்பதென்பது சட்டத்துக்கு அப்பாற்பட்ட பிரச்சினையாகும்’ என்று கேசரியிடம் சுட்டிக்காட்டினார். மேலும் ‘ஒரு தமிழ் பணிப்பெண்ணை என்ன செய்தாலும், அதிலிருந்து இலகுவாகத் தப்பித்துக்கொள்ளமுடியும் என்று சிலர் கருதுகின்றார்கள். ஆனால் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘இலங்கையின் கடந்தகால வரலாற்றை எடுத்துநோக்கையில் பொலிஸ்காவலின் கீழான மரணங்கள் ஒன்றும் புதிதல்ல என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவேண்டும் என்ற வலுவான தீர்மானம் மற்றும் அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் இன்மையும், பொலிஸ் திணைக்களமானது நீண்டகாலமாகக் கட்டமைப்பு ரீதியான வன்முறைகளுக்குப் பழக்கப்பட்டிருப்பதுமே பொலிஸ்காவலின் கீழான மரணங்கள் தொடர்வதற்கான பிரதான காரணமாகும்’ என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

மேலும் சந்தேகநபர்கள் பொலிஸாரால் தாக்கப்படல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படல் என்பவை ஒருபுறமிருக்க பொலிஸ் நிலையங்களில் பணிபுரியும் பெண் பொலிஸார் கூட வாய்மொழி மூலமாகவும், உடலியல் ரீதியாகவும் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொலிஸ்காவலின்கீழ் உயிரிழக்கும்போது அதனை இந்தச் சமூகம் வெகுசுலபமாக ஏற்றுக்கொள்வதாகவும், அதுகுறித்து எவ்வித எதிர்ப்பையோ அல்லது கரிசனையையோ வெளிக்காட்டுவதில்லை எனவும் குறிப்பிட்ட அம்பிகா சற்குணநாதன், எனவே குறித்தவொரு தரப்பினருக்கு எதிரான இத்தகைய குற்றங்களை நாம் உளவியல் ரீதியாக அனுமதிக்கும்போது நாளை அது நமக்கெதிராகத் திரும்பக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளும் கைதுசெய்யப்படவேண்டும் என்று வலியுறுத்திய சட்டத்தரணி சேனக பெரேரா, இதுகுறித்து ராஜகுமாரியின் கணவர் செல்வதுரை ஜேசுராஜின் சார்பில் வெகுவிரைவில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே விடயத்தை வலியுறுத்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், வெறுமனே பணி இடைநிறுத்தம் மற்றும் பணி இடமாற்றம் ஆகியவற்றுடன் நின்றுவிடாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் பொதுவானதும் சமத்துவமானதுமான முறையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.