வவுனியா – கூமாங்குளம் கிராம அலுவலகத்தில் மக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக தெரிவித்து குறித்த அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கட்டிடம் சுகாதார பிரிவினரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு 10கிலோ அரிசி பை விகிதம் வழங்குவதற்காக கூமாங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்கு ஓப்பந்தகாரரான வவுனியாவிலுள்ள பிரபல அரிசி ஆலையினால் நேற்று (26.05.2023) காலை 4860 கிலோ அரிசி (10கிலோ பை விகிதம் 486 அரிசி பை) இறக்கப்பட்டது.
குறித்த அரிசி பைகள் மக்களுக்கு நேற்றையதினமே பகிர்ந்தளிப்பட்டப்பட்டதுடன், அவை பழுதடைந்த நிலையில் காணப்பட்டத்தினையடுத்து பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
கூமாங்குளம் கிராம சேவையாளர் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்ட சுகாதார பிரிவினர் குறித்த அரிசியினை பரிசோதனைக்குட்படுத்தியதுடன், அவை பாவனைக்கு ஓவ்வாத நிலையில் காணப்படுவதினை உறுதிப்படுத்தியதுடன் அலுவலகத்தின் களஞ்சியசாலையினை சீல் வைத்தனர்.
(26.05.2023) அன்று மாலை 5.59மணிக்கு 260 மூடை (10கிலோ) அரிசியுடன் குறித்த மண்டபம் சமுர்த்தி உத்தியோகத்தர் ம.விக்கினேஸ்வரன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னினையில் பொது சுகாதார பரிசோதகர் கே.சிவரஞ்சனினால் சீல் வைக்கப்பட்டிருந்தது.இவ்விடயம் தொடர்பில் குறித்த கிராம சேவையாளரிடம் வினாவிய போது, மக்களுக்கு அரிசி வழங்குவதற்க்காக குறித்த அரிசி மூடைகள் அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்ட தனியார் அரிசி ஆலையினால் காலையே எமக்கு கிடைப்பெற்றது.
ஆனால் அவை பாவனைக்கு ஒவ்வாத நிலையில் காணப்படுவதாக மக்கள் சுகாதர பிரிவினருக்கு தகவல் வழங்கியிருந்தமையுடன் சுகாதார பிரிவினர் களஞ்சிய சாலையினை சீல் வைத்திருந்தனர்.
மேலும் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரிசியினை மீளப்பெறும் நடவடிக்கையினை கிராம அபிவிருத்தி சங்கத்தினர் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.