இணைய வழி மோசடிகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது எவ்வாறு ?

266 0

நீங்கள்  எப்போதாவது  இணையவழி மோசடிகளில்  சிக்கி  பணத்தை  இழந்துள்ளீர்களா ? அல்லது உங்கள் வங்கி அட்டைகளில்  இருந்து எப்போதாவது பணம் திருடப்பட்டுள்ளதா ? அவ்வாறெனில் எவ்வாறு  இந்த  மோசடிகளில் இருந்து நாம்  நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று பார்ப்போம்.

நாட்டில் இன்று  அதிகரித்துவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றம் என்பன அனைத்து தரப்பினரையும் மோசமாக பாதித்துள்ளது. அதனால் மலிவான  விலையில்  எங்கு பொருட்களை கொள்வனவு செய்யலாம்? என்பதில் பலரும் ஆவலாக இருக்கின்றனர்.

அதேவேளை , இணையம் மூலமாகவும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வாயிலாகவும் தாங்கள்  எதிர்பார்க்கும் பொருட்கள் மலிவான விலையில் விளம்பரமாகும் போது  அதில் பலரும் கவரப்படுவது இயற்கை. எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த பொருட்கள் தரமற்றவையாக இருப்பது மட்டுமன்றி, ஏமாற்றப்படுவதும் சர்வசாதரணமாக அமைகின்றது.

“ஆசை காட்டி மோசம் செய்வது” என்று  கூற கேள்விப்பட்டுள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் இதுவும் சர்வசாதாரணமான செயற்பாடாக மாறிவிட்டது என்பதே யதார்த்தம்.  அப்படியானால்  இணையம் மூலமான  வர்த்தகம்   மோசமானதா? என்று நீங்கள் கேட்கலாம்.

நிச்சயமாக இல்லை. உலகமே இன்று  இணையம்  மூலமான  வர்த்தகத்திலேயே ஈடுபட்டு வருகின்றது. எனினும் சரியான வகையில் பாதுகாப்பாக அதனை பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம்மை  சார்ந்ததாகும்.

இந்த வகையான மோசடிகள்  எவ்வாறு இடம்பெறுகின்றன?

சைபர் கிரைம் அச்சுறுத்தல்கள் மற்றும் சைபர் கிரைம் மோசடிகள்  என்பது கணினி அல்லது இணையத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் குற்றச் செயலாகும்.  மேலும் சைபர் குற்றவாளிகள் தனிநபர்களை சுரண்டுகிறார்கள் என்பதே உண்மை. இது எவ்வாறு நடக்கின்றது? அதனை  அதிலிருந்து பாதுகாப்பு தேடுவது எவ்வாறு ? என்று நாம்  கற்றுக் கொண்டால் அந்த சவாலை இலகுவாக முறியடிக்கலாம்.

இணைய மோசடி அல்லது இணைய மோசடிகளின்போது  அதில் ஒருவர் பணத்தை திருட இணையத்தைப் பயன்படுத்துகிறார். மோசடி செய்பவர்கள் தனிநபரை குறிவைத்து, குறுஞ்செய்திகள் மூலம், மின்னஞ்சல் மூலம் அல்லது தனிப்பட்ட தகவலைப் பெறுவதற்கான பிற வழிகளைப் பயன்படுத்தி  அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் அவர்களின் வங்கி கணக்கு  போன்ற முக்கியமான தகவல்களைப் பெற கணினி, கைபேசி அல்லது நெட்வொர்க்கை ஹேக் செய்ய முயலலாம்.

அல்லது தனிப்பட்ட தகவல்கள், கணக்கு எண்கள், கிரெடிட் அட்டை  விவரங்கள், சமூக பாதுகாப்பு எண்கள் என்பவற்றை பெற  இணையதளங்களுக்கு ,  தீய நோக்குடன் கூடிய  இணைப்பை அனுப்பலாம். இவை பொதுவான இணைய மோசடிகளாக  பார்க்கப்படுகின்றன . இதன் அடுத்த கட்டமாக மோசடிக்காரர்கள் அதி தொழில்நுட்பத்துடன் கூடிய கமராக்களைப் பயன்படுத்தி  வங்கி அட்டைகளின் எண்களை திருடி  பணத்தை குறிவைக்கலாம்.

அடுத்து பொதுவான சில  கிரெடிட் அட்டை  மோசடி, முதலீட்டு மோசடி மற்றும்  பொதுவான  சைபர் மோசடிகளைப் பார்ப்போம்

phishing மோசடிகள்

இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவோர் குறித்த பயனர் ஒருவரின்  பெயர்கள், கடவுச்சொற்கள் (OTP) போன்ற முக்கியமான தகவல்களைப் பெற போலியான மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகளை அனுப்பலாம்  அல்லது ஒரு முறையான நிறுவனம் எனக் கூறி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு  மக்களை  ஏமாற்றலாம். எனவே  குறித்த நிறுவனம் தொடர்பில் விழிப்புடன் இருப்பதுடன் , அந்த நிறுவனம் குறித்து ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.

அடையாளமறிந்து  திருட்டு (Identity theft )

இந்த வகையான திருட்டுகளில், மோசடி செய்பவர்கள், கணக்குகளைத் திறக்க  ஒருவரின்  பெயர், முகவரி மற்றும் சமூகப் பாதுகாப்பு எண் போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடி, தாங்கள்  கடனுக்கு விண்ணப்பிக்க அல்லது அவர்களின் பெயரில் பிற குற்றங்களைச் செய்ய முயலலாம்.

Malware மோசடி 

இந்த வகையான தீங்கு விளைவிக்கும்  மோசடிகளில் ஈடு பவர்கள், தீங்கு விளைவிக்கும் செயலிகளை (apps) அனுப்புகிறார்கள். அவற்றை நாம் திறக்கும் போது அவை கணினி அமைப்பை சேதப்படுத்த, சீர்குலைக்க அல்லது அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற வழிவகுக்கின்றது. மேலும் நிதி தொடர்பான முக்கியமான தகவல்களைப்  பெறவும் உதவுகிறது.

வேலைவாய்ப்பு  மோசடி

மோசடி செய்பவர்கள், வேலைக்கு ஆட்களை திரட்டுவது போன்றும், கவர்ச்சிகரமான சம்பளம் வழங்குவதாக வும்  விளம்பரங்களை  இணையம் ஊடாக வெளியீட்டு, இணையத்தில் மக்களைக் குறிவைத்து அவர்களின்  தகவல்களை  சேகரித்து பின்னர் அவர்களிடம்  பணத்தை பறிக்கிறார்கள். எனவே அது குறித்து எச்சரிக்கையு டன்  இருப்பது அ வசியம்.

இணைய ஷாப்பிங் மோசடிகள்

இது மிகவும் பொதுவான மோசடிகளில் ஒன்றாகும். சைபர் கிரிமினல்கள்,  போலி இ-காமர்ஸ் இணையதளங்களை அமைக்கின்றனர் அல்லது முறையான இணையதளங்களில் போலி தயாரிப்புகளை விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி கொள்முதல் செய்கின்றனர். இந்த போலி இணையதளங்கள் மூலம், பணத்தை திருடுவதற்காக கிரெடிட் அட்டை  விவரங்களையும் திருடலாம்.  எனவே இணையம் ஊடாக  பண பரிவர்த்தனைகளில் ஈடுபடுவோர், மட்டுப்படுத்தப்பட்ட தொகையை தமது கணக்கில் பேணுவதுடன் , வங்கி கட்டண பட்டியலை தவறாது சரிபார்த்துக்கொள்ள வேண்டும் .

சைபர் கிரைமில் இருந்து உங்கள் கணினி மற்றும் உங்கள் தனிப்பட்டதரவைப் பாதுகாப்பதற்கான சில வழிமுறைகள் .!

மென்பொருளையும் இயக்க முறைமையையும்  தவறாது புதுப்பிப்பது அவசியம். உங்கள் மென்பொருளையும் இயக்க முறைமையையும்  புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் பாதுகாப்பதற்கான , இணைப்புகளிலிருந்து  பயனடைய வழி செய்கிறது.

வைரஸ் தடுப்பு மென்பொருள் 

வைரஸ்  தடுப்பு மென்பொருள், அச்சுறுத்தல்களை  கண்டறிந்து அவற்றை ஸ்கேன் செய்து அகற்ற அனுமதிக்கிறது. எனவே, வைரஸ் தடுப்பு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் கணினியையும்  தரவையும் சைபர் கிரைமில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்தல்

மக்கள் ஊகிக்காத வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வது இன்றியமையாதது.மேலும்  அவற்றை  எங்கும் பதிவு செய்து வைப்பது தவறானது.

ஸ்பேம் மின்னஞ்சல்

Malware தாக்குதல்கள் மற்றும் சில வகையான சைபர் கிரைம்களால் கணினிகள் பாதிக்கப்படுகின்றன.  ஸ்பேம் மின்னஞ்சல்களில் உள்ள மின்னஞ்சல் இணைப்புகளையோ, உங்களுக்குத் தெரியாத   நம்பத்தகாத இணையதளங்களில் இருந்து வரும்  இணைப்பையோ  ஒருபோதும் திறக்க வேண்டாம்.

ஸ்பேம் மின்னஞ்சல்கள் அல்லது பிற செய்திகள் அல்லது அறிமுகமில்லாத வலைத்தளங்களில் உள்ள இணைப்புகளை திறப்பதன்  மூலம் நீங்கள்  சைபர் கிரைமுக்கு ஆளாகும் மற்றொரு வழியாக அமையும். எனவே இணையத்தில் பாதுகாப்பாக இருக்க இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம்

மேலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்  பாதுகாப்பானது என நீங்கள் உறுதியாக நம்பாத வரையில் தனிப்பட்ட தரவுகளை  தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாக எவருக்கும்  வழங்க வேண்டாம். அத்துடன் நீங்கள் எந்த இணையதள URL (Uniform Resource Locator) களைப் பார்க்கிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்

நீங்கள்  திறக்கும்  URLகள் மீது ஒரு கண் வைத்திருங்கள். அவை முறையானதாகத் தெரிகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் .அறிமுகமில்லாத அல்லது ஸ்பேம் போல் தோன்றும் URLகள் உள்ள இணைப்புகளை திறப்பதை  தவிர்க்கவும்.

உங்கள் வங்கி அறிக்கைகளை கண்காணிக்கவும்

அத்துடன் நீங்கள்  சைபர்  கிரைமுக்கு பலியாகிவிட்டீர்களா என்பதைக் கண்டறிய உங்கள் வங்கி கணக்குகளை  கண்காணித்து, வங்கியில் ஏதேனும் பரிச்சயமில்லாத பரிவர்த்தனைகள் இருப்பின் வங்கிகளை உடன்   தொடர்பு கொண்டு  வினவ தவறாதீர்கள். அதேவேளை உங்கள் கணக்குகளில் இருந்து பணம் திருடப்படுவதாகவோ அன்றேல் வங்கி அட்டைகள் தொலைந்து போனாலோ தாமதமின்றி வங்கியை தொடர்பு கொள்ள தவறாதீர்கள்.