எவரெஸ்ட் சிகரத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த துஷியந்தன்

284 0

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இந்த ஆண்டுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிலையில், உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக, தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டன.

அந்த வகையில், இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் விவேகானந்தன் துஷியந்தன் என்ற 46 வயதான நபர் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் கடந்த மே மாதம் 18ஆம் திகதி அனுஷ்டித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது,

நான் கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து மலையில் ஏறும் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றேன். ஆனாலும், முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை எவரெஸ்ட் மலை சிகரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதுக்குள் இருந்தாலும், அதனை சாத்தியப்படுத்த கடந்த காலங்களில் நான் கடுமையாக பாடுபட்டடேன்.

இதற்காக நான் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி எவரெஸ்ட் மலையின் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தேன்.

என்னுடன் 5 பேர் கொண்ட குழுவினர் எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி ஏற ஆரம்பித்தனர். இதன் முதல் நிலையாக பேஸ் கேம்ப் (Base camp) 5350 மீற்றர் உயரம் வரை சென்று அங்கு தங்கியிருந்து, மீண்டும் முதலாவது கேம்ப் (Camp 1) 6000 மீற்றர் உயரம் வரை சென்றோம்.

பின்னர் அங்கிருந்து 2ஆவது கேம்ப் (Camp 2) 6400 மீற்றர் உயரம் வரை சென்று, அங்குள்ள காலநிலைக்கேற்ப எம்மை தயார்ப்படுத்திக்கொண்டோம்.

அதன் பின்னர், அங்கிருந்து 3ஆவது கேம்ப் (Camp 3) 7300 மீற்றர் உயரத்துக்கு ஏறினோம். அங்கிருந்து 4ஆவது கேம்ப் ( Camp 4) 7925 மீற்றர் உயரத்துக்கு ஏறினோம். அங்கும் எம்மை காலநிலைக்கேற்ப தயார்ப்படுத்தும்போது கடும் குளிரினால் எமது பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

ஆனால், கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் தினமான அன்று நாம் 8849 மீற்றர் உயரமான எவரெஸ்டின் சிகரத்தை அடைந்து அங்கு நான் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்தேன் என்கிறார் துஷியந்தன்.

விவேகானந்தன் துஷியந்தன் திருமணம் முடித்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார். அவருக்கு 3 பெண்பிள்ளைகள் உள்ளனர்.

துஷியந்தன் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரையடுத்து 13 வயதில் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து சென்றுள்ளார்.

அத்தோடு இவர் ஒரு விளையாட்டு வீரருமாவார்.  மரதன், சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இவர் மலையேறுவதை ஆரம்ப காலங்களில் பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.

இந்நிலையில், 2010ஆம் ஆண்டு மலேசியாவின் கொற்றுகினபாலோ, 2016இல் ஆபிரிக்காவின் கிளிமஞ்சாரோ, 2020இல் இங்கிலாந்தின் வேல்ஸ், 2022இல் நேபாளத்தில் ஐலன்பீக், லெபட்ரே, மனசிலு போன்ற மலைகளில் ஏறி பயிற்சி பெற்றுள்ளார்.

ஆரம்பகால மலையேறும் பயிற்சியை இவருக்கு ஜோன்குப்த வழங்கிய போதிலும், எவரெஸ்ட் மலையில் ஏறும்போது இவரது பயிற்சியாளராக யான்தப்பா இருந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதலாவது இலங்கை தமிழனும், இலங்கையைச் சேர்ந்த ஆணும் தானே எனக் கூறும் துஷியந்தன், இதற்கு முன்னர் மலேசிய தமிழர் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளதாக கூறுகிறார்.

தனது இனத்தின் மீதான பற்றும், நாட்டின் மீதான பற்றுமே தன்னை சிகரம் தொடுமளவு சாதிக்க வைத்ததாக கூறும் இவர், எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நாம் சாதிக்க வேண்டும் என உறுதிபட தெரிவிக்கிறார்.