ஒழுக்காற்று விசாரணைகளிலிருந்து வைத்தியர் ஷாபி விடுவிப்பு

140 0
சிங்கள தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத் தடை செய்ததாக பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சுகாதார அமைச்சு முன்னெடுத்த ஒழுக்காற்று விசாரணைகளில் அவர் குற்றச் சாட்டுக்களில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், வைத்தியர் ஷாபியை மீண்டும் குருணாகல் போதனா வைத்தியசாலையிலேயே நியமனம் வழங்கி கடமையில் இணைக்க சுகாதார அமைச்சு குருணாகல் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் வைத்தியர் ஷாபியை இவ்வாறு குருணாகல் போதனா வைத்தியசாலையில் கடமைகளில்

இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் விசாரணைக் குழு மற்றும் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று விசாரணைக் குழு ஆகியன வைத்தியர் ஷாபிக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுத்து கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி தனது அறிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தவிடம் கையளித்தது. அதன்படி அந்த அறிக்கையை அரச சேவைகள் ஆணைக் குழுவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுகாதார அமைச்சு அளித்த அறிக்கையை ஆராய்ந்த அரச சேவைகள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி  கடிதம் ஒன்றை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த கடிதம் ஊடாக அரச சேவை ஆணைக்குழுவின் சுகாதார சேவைகள் தொடர்பான சபையின் செயலாளர் டு.யு. கலுகப்புஆரச்சியின் கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்திலேயே வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனை உடன் அமுலுக்கு வரும் வகையில் குருணாகல் வைத்தியசாலையில் பணியில் இணைக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்படும் போது 6 மாதங்களுக்குள் ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என நிபந்தனைகள் இருக்கும் போதும் வைத்தியர் ஷாபி தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணை நிறைவடைய 4 வருடங்கள் வரை சென்றமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயமாகும்.

உண்மையில் கடந்த 2019 மே 24 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தௌஹீத் ஜமாஅத் அமைப்பிடமிருந்து பணம் பெற்று அவ்வமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சிசேரியன் அறுவைச் சிகிச்சை மூலம் சிங்களத் தாய்மார்களுக்கு கருத்தடை செய்தமை,

தவறான வழிகளில் பெற்ற பணத்தைக்கொண்டு சொத்துக்கள் சேர்த்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் இவர் கைது செய்யப்படாது போனால் நாட்டை விட்டு அவர் தப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் இவருக்கும் இவரது  வீடுகளுக்கும் சேதம் விளைவிக்கப்படலாம் எனும் ஊகத்தின் அடிப்படையிலும் குருணாகல் பொலிஸாரால் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார்.