இராணுவத்தினர் பயன்படுத்திவரும் அச்சுவேலி தெற்கு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டக்காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சால் அறிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை குறித்த காணிகளை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை என வருத்தம் தெரிவித்த காணி உரிமையாளர்கள், மேலும் தாமதித்து ஏமாற்றாமல் அவ்விடத்தை விட்டு இராணுவத்தினரை வெளியேறுமாறும் கோரியுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக காணி உரிமையாளார்கள் கருத்து தெரிவிக்கையில்
அச்சுவேலி தெற்கு பகுதியில் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக அவ் இடத்தில் இருந்து நாம் வெளியேறிய போது அப்பகுதியில் உள்ள 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் (சுமார் 47 பரப்பு) தோட்டக்காணிகளும் அதனுடன் இணைந்த கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான கட்டடங்களும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டது. யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகள் கடந்த நிலையிலும் குறித்த காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இக் காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2012 ஆம் அண்டில் இருந்து சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சுக்கள் அதிகாரிகளிடத்திலும் போராடி வருகிறோம்.நில அளவை திணைக்களத்தினரால் 3 தடவைகள் குறித்த காணிகளை சுவீகரிக்க அளவீடு மேற்கொள்ள முயன்ற போது எமது பலத்த எதிர்ப்புக்களின் மத்தியில் எமது காணிகள் அளவீடு செய்வது கைவிடப்பட்டது. முன்பு வெங்காய சங்கம் என மக்களின் பணத்தில் வாங்கப்பட்ட காணி தான் தற்போது கூட்டுறவு சங்கமாகவுள்ளது. காணிகளை மீள் பெறுவதில் கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு எந்தவித அக்கறையும் இல்லை. எனவே அருகில் உள்ள தோட்டக்காணி உரிமையதளர்கள் நாம் தான் பாதிக்கப்படுகிறோம்.
இது குறித்த கொழும்பு நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்த போது காணி அமைச்சின் செயலாளாரினால் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ‘காணி கையகப்படுத்தல் கைவிடப்பட்டது’ என அறிவிக்கப்பட்டது.
குறித்த காணியை பிரதேச செயலருக்கு கையளித்துவிட்டு இது குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 2016 ஆம் அண்டு முற்பகுதியில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது, காணி உரிமையாளாகளான எம்மில் சிலரை இராணுவ முகாமுக்குள் அழைத்த இராணுவத்தினர், இன்னும் ஒரு மாதத்தில் உங்;கள் காணிகளை கையளித்து விட்டு இங்கிருந்து புறப்படுவோம். ஒரு மாதம் நாங்கள் தங்கியிருக்க உங்கள் சம்மத கடிதம் தாருங்கள் என பணித்தார்கள். அதற்கு நாம் நீங்கள் ஒரு மாதத்தில் காணிகளை கையளிப்போம் என்று கடிதம் தந்துவிட்டு இருங்கள் என தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அவ்வாறு கடிதம் தரவில்லை.
சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி தம்வசம் எமது காணிகளை 521 ஆவது படைப்பிரிவு பயன்படுத்துவதாகவும் இன்னோர் இடத்தில் அப் படைப்பிரிவை மீள அமைக்கவுள்ளதாகவும் இதற்கு குறிப்பட்ட காலம் தேவை எனவும் அதை அமைத்த பின்னர் எமது காணிகளை விடுவிப்பதாக இராணுவ தலமையகம் அறிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் இருந்து எமக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் பின்னர் 7 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து உரிய நடவடிக்கையை மேற்கொண்டு எமது காணிகளை பெற்றுத்தருமாறு வடமாகாண ஆளுநர். வடமாகாண முதலமைச்சர்,சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மனித உரிமை ஆணைக்குழு, யாழ்.மாவட்ட அரச அதிபர், கோப்பாய் பிரதேச செயலர் அனைவருக்கும் கடிதங்களை அனுப்பியிருந்தோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எம்மால் வன்முறையில் இறங்கி போராட முடியாது எமது விளைநிலங்களை மீள் கையளிக்கம் பட்சத்தில் எமது பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.எனவே தயுவு செய்யத எமது விளைநிலங்களை இராணுவத்தினர் கையளிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் கருணை கூர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கேட்டுக்கொண்டுள்ளனர்.