விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர்கள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை

109 0

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்  முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) பயணிகள் முனையத்தில் உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்களை நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சுங்க பணிப்பாளர் நாயகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொது பயணிகள் முனையத்தின் ஊடாக விமானப் பயணிகள் கொண்டுவரும் பயணப் பொதிகளை பரிசோதிக்க உயர் தொழில்நுட்ப ஸ்கேனிங் இயந்திரங்கள் இருந்தபோதிலும், முக்கிய பிரமுகர்கள் பயணிகள் முனையத்தில் அவ்வாறான வசதிகள் இல்லை.

முக்கிய பிரமுகர்களுக்கான முனையத்தின் ஊடாக சட்ட விரோதமாக பொருட்கள் கொண்டு வரப்படுவதைத் தடுப்பதற்காக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, விசேட பயணிகள் மற்றும் பிரமுகர்களுக்கான முனையத்திலும் இந்தக் கருவிகளை நிறுவுமாறு ஜனாதிபதியின் செயலாளர் இலங்கை சுங்கத்துக்கு அறிவித்துள்ளார்.