சட்டவிரோத ஆவணங்கள் மூலம் பிரித்தானியா செல்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

96 0

தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறமையான தொழிலாளர் விசா முறையைப் பயன்படுத்தி பல இலங்கையர்கள் குற்றக் குழுக்களால் பிரித்தானியாவிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பிரித்தானியாவில் தொழில் வாய்ப்பை பெற்ற ஒருவர் மூலமாகவே இவர்கள் அழைத்து வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

எனினும் இதன்போது, திறமையான தொழில் விசாவில் தங்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்கான உரிமை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெண்
தமது தொழில் விண்ணப்பத்துடன் பிரித்தானியாவில் உள்ள பராமரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு இலங்கை பெண் ஒருவர் சமர்ப்பித்த பொய்யான ஆவணங்கள் மூலமே இந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

தாதியர் டிப்ளோமா, உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவற்றுக்கான போலி சான்றிதழ்கள் இதில் அடங்கியிருந்த நிலையில் இந்த போலி ஆவணங்களுடன் இலங்கை பெண் ஏழு ஆண்டுகள் மருத்துவமனை ஒன்றில் தாதியர் சேவையில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் இரண்டு வருடங்கள் முதியோர் இல்லத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வெளிவரும் பட்சத்தில்; ஏமாற்றியவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன், 10 ஆண்டுகள் வரை விண்ணப்ப தடை விதிக்கப்படும் என பிரித்தானியா உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேநேரம் திறமையான தொழிலாளர் விசா முறையை எதிர்காலத்தில் அவமதிப்பு செய்வதைத் தடுக்க பிரித்தானிய உள்துறை அலுவலகம் அதன் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.