கும்பகோணத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயில் குளத்தில் மீன் பண்ணை நடத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், கும்பகோணம் ஐவர்பாடி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி குருக்கள் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனது முன்னோர்களால் 200 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அகஸ்தீஸ்வரர் சுவாமி கோயிலை தனியார் கோயில் என 2002-ம் ஆண்டில் இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் தற்போதுள்ள ஆணையர் தொடங்கிய விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தந்தன் தோட்டம் பஞ்சாயத்து தலைவர் எந்தவித உரிமமும், அனுமதியும் இல்லாமல், சம்பந்தப்பட்ட கோயில் குளத்தில் மீன் வளர்த்து விற்பனை செய்து, அதிக லாபம் ஈட்டி வருகிறார். பூஜை, அபிஷேகம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் கோயில் குளத்தை மீன் வளர்க்கும் பண்ணையாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். கோயில் குளம் விவகாரத்தில் தலையிட பஞ்சாயத்து தலைவருக்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், கோயில் குளத்தின் நீர்தான் பூஜைக்கு பயன்படுத்துகிறது என்பதை கருத்தில் கொள்ளாமல் மீன் வளர்ப்பதை ஏற்க முடியாது. எனவே, தந்தன் தோட்டம் கிராமத்தில் உள்ள கோயில் குளத்தை மீன் வளர்க்கும் பண்ணையாக பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், அந்தக் குளம் தொடர்பான விவகாரத்தில் பஞ்சாயத்து தலைவர் தலையிடக் கூடாது என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.