கஷ்டப்படும் மக்களுக்காக நான் அரசியலுக்கு வந்தாக வேண்டும்- சசிகலா

108 0

சசிகலா வேளாங்கண்ணியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஓ.பன்னீர்செல்வத்தை சந்தீப்பீர்களா? சந்தித்தால் என்ன மாற்றம் நிகழும் என்று கேட்கிறீர்கள்.

அரசியலில் என்ன மாற்றம் நிகழும் என்பது 2024-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது தெரியும்.

எல்லோரையும் சந்திப்பேன். என்னுடைய அரசியல் நகர்வு மெதுவாக போவதாக நான் நினைக்கவில்லை. அதாவது ஒரு கட்சி என்று இருந்தால் அதில் தொண்டர்களின் விருப்பம் தான் என்றைக்கும் வெற்றி பெறும். அதன் அடிப்படையில் பார்த்தீர்கள் என்றால் தொண்டர்களின் விருப்பம் என்ன என்பது தமிழக மக்களுக்கு தெரியும், தொண்டர்களுக்கும் தெரியும். அதனால் விரைவில் நல்லபடியாக எல்லாம் நடக்கும். கட்சிக்காரர்களின் ஆதரவு, பொதுமக்களின் ஆதரவு என இரண்டும் இருந்தால்தான் இவர்கள் தான் தலைமை என்று சொல்ல முடியும். அதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

வருங்காலத்தில் தேர்தலின் போது அதனை பார்ப்பீர்கள். எல்லோரையும் ஒன்றாக சேர்த்துக் கொண்டு போவது தான் என்னுடைய வேலை. இதை நான் ஏற்கனவே ஜானகி, ஜெயலலிதா ஆகியோர் தனி அணியாக தேர்தலை சந்தித்த பிறகு எல்லோரும் ஒன்று சேர்க்கும் பணியினை அந்த காலக்கட்டத்தில் கூட நான் செய்திருக்கிறேன். அதனால் இதை இப்போதும் செய்வது பெரிதாக தெரியவில்லை. என்ன பொருத்தவரை நான் நினைத்ததை முடித்துக் கொண்டே வருகிறேன்.

தி.மு.க. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை இன்னொரு முறை நாங்கள் கொடுக்க மாட்டோம். தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வால் தான் காப்பாற்ற முடியும். அதனை எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். அதனை நிச்சயம் செய்து ஜெயலலிதா இருந்தபோது எப்படி ஆட்சி நடத்தினாரோ அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம். அ.தி.மு.க. என்று நான் சொல்வது எங்களை தான்.

அனைவரும் ஒன்று சேர்ந்து 2024 தேர்தலை நிச்சயம் சந்திப்போம். அதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. நான் வெளியில் செல்லுகின்ற போது அங்கே பொதுமக்கள் சொல்வது, என்னிடம் பேசுவது, எல்லோரும் நினைப்பது நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை வெளிப்படையாக பேசுகிறார்கள்.

நான் நம்பி ஒருவரிடம் பொறுப்பை கொடுத்திருந்தேன். அவரவர்கள் எடுத்துக்கொள்ளும் முறையில் தான் இருக்கிறது. அப்படி தான் நான் எடுத்துக்கொள்கிறேன். ஜெயலலிதா நிறைய இதுபோன்று சந்தித்திருக்கிறார்.

என்னை பொறுத்த வரைக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சில பேர் மாற்று எண்ணத்திற்கு சென்று விடுவார்கள். இதனை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ஜெயலலிதா வேண்டாம் என்று சொன்ன ஆர்.எம்.வீரப்பனாக இருக்கட்டும்.

எஸ்.டி.சோமசுந்தரமாக இருக்கட்டும், தலைவர் இருக்கின்ற காலத்தில் இருந்தே ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள் இருந்தால் கூட பிளவுபட்ட கழகம் ஒன்றாக இணைந்த பிறகு, ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியான காங்கேயத்தில் ஆர்.எம்.வீரப்பனுக்கு விட்டு கொடுத்தார்கள்.

அவரையும் அமைச்சராக்கினோம். ஆகையால் ஒரு கட்சி என்று இருந்தால் இதுபோன்றெல்லாம் இருக்கும். பொதுமக்களை பார்க்கும் போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

39 ஆண்டு காலம் நாங்கள் அரசியலில் பயணம் செய்திருக்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போகாத இடமில்லை. எங்கள் வண்டியில் டயர் படாத இடமில்லை. அந்தளவுக்கு நாங்கள் குக்கிராமங்கள் எல்லாம் சென்றிருக்கிறோம். அந்த மக்களை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

பொதுமக்களுக்காகவே நான் வந்தாக வேண்டும் என்ற முயற்சியில் தான் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை ஒருங்கிணைந்த அ.தி.மு.க. தான் 2024 பாராளுமன்றத் தேர்தலை சந்திப்போம். ஒன்றிணைந்தால் தான் தி.மு.க.வை வேரோடு எடுக்க முடியும்.

தி.மு.க. மாதிரி எங்கள் தொண்டர்கள் யாரும் இப்படி இருக்கமாட்டார்கள்.

ஜெயலலிதா கட்சியை மிகவும் கட்டுப்பாடாக வைத்திருந்தார்கள். கட்சியினர் எப்போதும் பொதுமக்களுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள்.

தி.மு.க.வினரிடம் அதனை எதிர்பார்க்க முடியாது. 2026-ல் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வால் நிச்சயம் ஆட்சிக்கு வரும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. இவ்வாறு சசிகலா கூறினார்.