கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இரண்டு பேர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைக்கு அப்போதைய மேல்மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபராக கடமையாற்றிய அனுர சேனாநாயக்கவினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக ரகசிய காவற்துறையினர் இன்று நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் ஜயராம் ட்ரொக்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பெற்று கொள்ளப்படவுள்ளதாக ரகசிய காவற்துறையினர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர்.
கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த இரண்டு பேரும் பயணித்த வேன் ரக வாகனம் 72 துண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்த நிலையில் வெலிசர கடற்படை முகாமில் இருந்து மீட்கப்பட்டது.
அது தொடர்பில் அதன் அப்போதைய கட்டளை அதிகாரியிடம் வாக்குமூலம் பெற்று கொள்ளப்படவுள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான விடயங்களை ஆராய்ந்த நீதவான், கைது செய்யப்பட்டுள்ள லெப்டின்ன கெமான்டர் தம்மிக அனில் மாபா எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்