இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கறுப்பு பட்டியலில் உள்ளாகும்

80 0

முறையற்ற மீள் ஏற்றுமதி நடவடிக்கையினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கறுப்பு பட்டியலுக்குள்  உள்ளடக்கப்படும் அவதான நிலை காணப்படுகிறது.

துறைமுகத்தில் தேங்கியுள்ள 39 கொள்கலன்கள் மீள் ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் ஊடாக 35 சதவீத பெறுமதி சேர் வரி அறவிடப்படுகிறதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கை இந்திய சுதந்திர  ஒப்பந்தத்துக்கு அமைய இலங்கையில் இருந்து இந்திய சந்தைகளுக்கு சுமார் 4000 பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனூடாக தேசிய உற்பத்தியாளர்கள் பயனடைகிறார்கள்.

இந்தோனேசியாவில் இருந்து உலர்ந்த பாக்கு இறக்குமதி செய்யப்பட்டு, அவை இலங்கை ஊடாக இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த மீள் ஏற்றுமதியின் போது பெறுமதி சேர் வரி ஊடான வருமானம் முறையாக கிடைக்கப் பெறுகிறதா என்பது சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது.

மீள் ஏற்றுமதி நடவடிக்கையின் போது இடம்பெறும் முறைகேடுகளினால் தேசிய உற்பத்தி  ஏற்றுமதியாளர்களும், முறையான ஏற்றுமதி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளினால் இலங்கை இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்  கறுப்பு பட்டியலில் சேரும் அவதான நிலை காணப்படுகிறது.

மீள் ஏற்றுமதிக்காக துறைமுகத்தில் தேங்கியுள்ள 39 கொள்கலன்களை இறக்குமதி செய்தது யார்,இந்த மீள் ஏற்றுமதி ஊடாக முறையான பெறுமதி சேர் வரி கிடைக்கப் பெறுகிறதா என கேள்வியெழுப்பினார்.