யாழ். – மன்னார் போக்குவரத்து சேவையிலீடுபடும் இ.போ.ச. பேருந்துகளின் நேர மாற்றத்தினால் பயணிகள் அசௌகரியம்

134 0
யாழ்ப்பாணம் – மன்னார் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கோண்டாவில் சாலைக்கு சொந்தமான பேருந்து சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் அரச ஊழியர்கள் உள்பட தினமும் சேவையை பயன்படுத்தும் பயணிகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அதிகாலை 5.45 மணிக்கு மன்னார் புறப்படும் பேருந்து மீளவும் முற்பகல் 10.15 மணிக்கு மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சேவையை ஆரம்பிக்கும்.

மீளவும் பிற்பகல் 1.45 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார் புறப்படும் பேருந்து அங்கிருந்து மீளவும் மாலை 5 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு சேவையை ஆரம்பிக்கும்.

இந்த சேவையில் ஈடுபடும் பேருந்தை யாழ்ப்பாணம் சாலை நிர்வாகம் மாற்றுவதனால் தாம் பாதிக்கப்படுவதாக ஆசிரியர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர சேவையிலிருந்த நல்ல நிலையிலிருந்த பேருந்து கொழும்பு சேவை உள்பட சிறப்பு சேவைகளுக்கு மாற்றப்படுவதனால் குறுந்தூர சேவைக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகளே மேற்படி யாழ்ப்பாணம் – மன்னார் சேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இரு மார்க்கமாக தினமும் 5 மணி நேரத்துக்கு மேல் வார நாட்களில் பயணிக்கும் அரச மற்றும் தனியார் ஊழியர்கள், சரியான தரநிலையில் இல்லாத பேருந்தில் பயணித்து உபாதைக்கு உள்ளாவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

நெடுந்தூர சேவையில் ஈடுபட உரிய தரநிலையில் இல்லாத பேருந்துகளை வழங்கும் யாழ்ப்பாணம் சாலை நிர்வாகம் இதுதொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்று பல்வேறு முறை முறையிட்ட போதும் முன்னேற்றம் இல்லை என கூறப்படுகிறது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து தமது சௌகரியமான பயணத்தை உறுதி செய்யுமாறு கோரி மன்னார் மாவட்டச் செயலாளர் ஊடாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு மனு ஒன்றை வழங்கும் ஏற்பாடும் முன்னெடுக்கப்படுகிறது.

அந்த மனுவில் குறிப்பிடுவதற்காக மாதாந்தம் இ.போ.சபைக்கு அரச மற்றும் தனியார் ஊழியர்களினால் பருவச்சீட்டு மூலம் செலவிடும் பல லட்சம் ரூபாய் பணம் தொடர்பான விபரமும் திரட்டப்படுகிறது.

அத்துடன், நெடுந்தூர சேவையில் ஈடுபடுத்துவதற்கான தரநிலை இல்லாத பேருந்துகளை யாழ்ப்பாணம் சாலை முகாமையாளருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் யாழ்பபாணம் மாவட்டச் செயலாளரிடமும் முறைப்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.