மத்திய ஜப்பானில் உள்ள நாகானோ மாகாணத்தில் மர்ம நபர் ஒரு பெண் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு போலீசார் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பள்ளியிலேயே தங்க வைக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜப்பானில் துப்பாக்கி சூடு போன்ற குற்றங்கள் மிகவும் அரிது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருக்க விரும்புவோருக்கு உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பு கடுமையான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.