தீபாவளி, சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விடுமுறை: நியூயார்க் மாகாண பேரவையில் மசோதா நிறைவேற்ற திட்டம்

139 0

தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை வழங்க வகை செய்யும் மசோதாவை நியூயார்க் மாகாண பேரவையில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி மற்றும் சீனாவில் கொண்டாடப்படும் புத்தாண்டு ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் நியூயார்க் மாகாண அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மாகாண உறுப்பினர்களும் பேரவையில் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்நிலையில், நியூயார்க் மாகாண பேரவைத் தலைவர் கார்ல் ஹீஸ்டி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “நியூயார்க் மாகாணத்தில் தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அங்கீகரிக்க வேண்டியது அவசியம். எனவே, இது தொடர்பான மசோதா பேரவையில் நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும். அதற்கு முன்னதாக, இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்” என்றார்.