ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ், முஸ்லிம், மலையக கட்சிகள் பங்கேற்கவில்லை.
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணை வியாழக்கிழமை (25) காலை 10 மணி முதல் 1 மணிவரை இடம்பெற்றது.
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க படைக்கல சேவிதரினால் காலை 10மணிக்கு சபைக்குள் அழைத்துவரப்பட்டார்.
இதன்போது சபைக்குள் இருந்த பிரதமர். அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மேசைகளில் தட்டி அவருக்கு வரவேற்பளித்தனர். என்றாலும் செயலாளர் சபைக்குள் வருவதற்கு முன்னர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வெளியே சென்று விட்டார்.
சபைக்குள் அழைத்துவரப்பட்ட தம்மிக்க தசநாயக்க தனது பாராளுமன்ற செயலாளர் நாயகருக்குரிய ஆசனத்தில் அமர்ந்தார். அவரின் குடும்பத்தினர் உறவினர்கள் சபாநாயகர் கலரியில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில் ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையை சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்து ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் என பலரும் உரையாற்றினார்கள். எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவும் நீண்ட நேரத்தின் பின்னர் சபைக்குள் வந்து அவரும் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவின் சேவைகள், திறமைகள் .அர்ப்பணிப்புக்கள் ,சாதனைகள் தொடர்பில் பலரும் பல விடயங்களை முன்வைத்து வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர் .
ஆனால் ஓய்வு பெற்றுச் செல்லும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவுக்கு பாராட்டு தெரிவிக்கும் பிரேரணையில் தமிழ் ,முஸ்லிம். மலையக கட்சிகளைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.