பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான எமது முன்மொழிவுகளைக் கேட்கக் கூடிய அறிவுள்ள அரசியல்வாதிகள் இந்த நாட்டில் இல்லையென அகில இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் (VIAL) சங்கத் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.
”நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சிறந்த யோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் எம்மிடம் உள்ளன. ஜப்பானிடமிருந்து நாம் உதவி பெற்றக் கொள்ள முடியும். ஆனால் இந்த யோசனைகளை எல்லாம் கேட்க எம்மிடம் அறிவார்ந்த அரசியல் வாதிகள் இல்லை.
600 க்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் வான்கள் துறைமுகத்தில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக முடங்கியிருக்கின்றன. அவற்றை விடுவிக்குமாறு நாங்கள் பலமுறை அரசாங்கத்திடம் கேட்டு விட்டோம். அவை பல பில்லியன் ரூபாய் பெறுமதியானவை. அந்த லாபத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் முன்வரவில்லை”, என அவர் தெரிவித்தார்.
“டொலர் பிரச்சினை தீரும் வரை வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்படாது. புதிய ரக வாகனங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் இப்போது இல்லை. ஆனால் எங்களால் வாகனங்களை இறக்குமதி செய்து அரசாங்கத்திற்கு லாபம் ஈட்டித் தர முடியும். மேலும் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியால் தற்போது கையிருப்பிலுள்ள வாகனங்களின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன”, என இந்திக்க மேலும் தெரிவித்தார்.