கல்முனையில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தியவர் கைது

115 0

மோட்டார் சைக்கிளில் கசிப்பு கடத்தி சென்ற இளைஞனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்றையதினம் மோட்டார் சைக்கிளில் சூட்சுமமாக எடுத்து செல்லப்பட்ட கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிவப்பு நிற ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் உட்பட கடத்தி செல்லப்பட்ட 20,000 மில்லி லீட்டர் கசிப்பு உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர் பிரதான வீதியில் உள்ள பெரிய கல்லாறு பகுதியில் அமைந்துள்ள விசேட சோதனை சாவடியில் வைத்து கைதானார்.

 

மேலும் கைதான சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்க விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.