மட்டக்களப்பு மாவட்டத்தில் மரமுந்திரிகைச் செய்கை அறுவடை ஆரம்பித்திருக்கிறது.
இம்முறை மரமுந்திரிகைச் செய்கை விளைச்சல் பாரிய வீழ்ச்சியடைந்திருப்பதாக மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடிக்கடி பெய்த மழை மற்றும் கடுமையான வெப்பமான காலநிலையே இதற்கான காரணமென விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பூக்கள் கருகி காய்க்கும் வீதம் பெருமளவில் குறைவடைந்துள்ளதாகவும் இதன் காரணத்தால் மரமுந்திரிகை செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இம்முறை 400 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்ததாபன மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் எச்.பி.டி.தயாரத்ன தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டதாகவும் வாழைச்சேனை, கிரான், செங்கலடி, வாகரை பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனை- மட்டக்களப்பு பிராதான வீதியில் அதிகளவான மரமுந்திரிகைப் பழங்கள் தெருவோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.