தங்கத்துடன் சுங்கத்தினரிடம் பிடிபட்டமை தொடர்பில் அலி சப்ரி ரஹீம் வெளியிட்ட கருத்து

103 0

இது என் தவறல்ல. நான் குற்றவாளியுமல்ல. எனது நண்பர் ஒருவரே தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை கொண்டு வந்தார். இறுதியில் நானே குற்றவாளியாக கைதுசெய்யப்பட்டேன்.

எந்த தவறும் செய்யாமல் எனக்கு 75 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

அத்தோடு, இது தொடர்பில் நான் ஜனாதிபதி, பிரதமருக்கு அறிவித்தேன். இருப்பினும் உதவி செய்ய எவரும் முன்வரவில்லை. எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய அலி சப்ரி ரஹீம் ஆளும் கட்சியின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்திருந்தார்.

தாம் பிரச்சினையொன்றில் இருக்கும்போது எவரும் என்னை காப்பாற்றாத காரணத்தினால் தான் அரசாங்கத்தின் பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அவர் தெரிவித்தார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்த சம்பவம் மிகுந்த கவலையளிக்கிறது. அன்று என்னுடன் விமானத்தில் வருகை தந்த என்னுடைய நண்பர் ஒருவரே தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை கொண்டு வந்துள்ளார்.

அவரிடமிருந்தே சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் இருவரும் கடவுச்சீட்டுகளை ஒன்றாக வழங்கியபோதே சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூலம் கைதுசெய்யப்பட்டோம்.

எனக்கு 75 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளனர். சொத்துக்களையும் பறிமுதல் செய்துள்ளார்கள். இதை பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்தேன்.

அவர்கள் இது தொடர்பில் ஆராய்வதாக கூறினார்கள். இருப்பினும், அவர்கள் உதவ முன்வரவில்லை. உரிய நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

நடவடிக்கை எடுத்திருந்தால், என்னை அதிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கும். இன்று நான் செய்யாத தவறுக்கு குற்றவாளியாக நிற்பதோடு, பாரியதொரு தொகையையும் அபராதமாக செலுத்தியுள்ளேன்.

ஆளுங்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் எனக்கு எந்தவொரு தவறான அபிப்பிராயங்களும் கிடையாது. எனக்கு இதுபோன்ற அநீதி நடந்திருக்கும்போது நான் ஏன் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும்?

இதுபோன்ற நேரத்தில் அவர்கள் காப்பாற்றவில்லை என்றால் அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை. அதனால் தான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன்.

என் மீது பொய்க்குற்றம் சுமத்தி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த தரப்பினருக்கு எதிராக நிச்சயம் வழக்கு தாக்கல் செய்வேன் என்றார்.

முன்னதாக 3.5 கிலோ தங்கம் மற்றும் 91 கையடக்கத் தொலைப்பேசிகளுடன் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த குற்றச்சாட்டில், பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கத் திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டார். இருப்பினும், நேற்று (24) 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அத்துடன், அவர் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் சட்ட விரோத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி 782 இலட்சம் ரூபா என சுங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது.