வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

125 0

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்தாலோசித்து தீர்மானம் அறிவிக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை வியாழக்கிழமை (25) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஆதரவாக 123 வாக்குகளைப் பெற்று 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பிரேணை மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி ஏகமனதாக தீர்மானித்திருந்தது. எவ்வாறிருப்பினும் கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பிரேரரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியவுடன் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்படுவார் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.