வெள்ளவத்தையில் தனியார் வங்கியொன்றின் ATM இயந்திரத்தில் போட வேண்டிய பணத்தை திருடிய வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த பணத்தை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்தியவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வெள்ளவத்தையில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தனியார் வங்கியின் உதவி முகாமையாளர் கடந்த 21ஆம் திகதி குறித்த வங்கி பாதுகாப்பு அதிகாரியுடன் இணைந்து பல இலட்சம் ரூபா பணத்தை ATM இயந்திரத்தில் போட்டதாக குறிப்பிடப்படுகிறது.
மறுநாள் வங்கியின் உதவி மேலாளர் ATM இயந்திரத்தில் மீதம் இருந்த பணத்தை சரிபார்த்த போது, ஒரு லட்சத்து 60000 ரூபாய் அதாவது ஐந்தாயிரம் ரூபாய் 32 நாணயத்தாள்கள் காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, ATM இயந்திரத்தில் எப்படி பணம் வரவு வைக்கப்படுகிறது என்பதை காட்டும் cctv காட்சிகளை சரிபார்த்த போது, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த பணத்தில் சிலவற்றை திருடி தனது கால்சட்டை பாக்கெட்டில் போட்டது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் திருடப்பட்ட பணத்தில் ஒரு பகுதியை தனது வீட்டின் மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை செலுத்த செலவிட்டுள்ளதாகவும், மீதி பணம் அவரது இரண்டு வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.