கோவிட் 19-ஐ விட ஆபத்தான பெருந்தொற்று ஏற்பட வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

90 0

கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் அதன் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் ஆற்றிய உரை: “கோவிட் தொற்றுநோயைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. அது பரவாமல் தடுப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

கோவிட் பெருந்தொற்றால் உலகம் முழுவதும் 2 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட் பெருந்தொற்று இனி உலகிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், அந்த பெருந்தொற்று மறைந்துவிடவில்லை. தொலைவில் இருக்கிறது. புதிய பெருந்தொற்று கோவிட் பெருந்தொற்றைவிட அதிக உடல் பாதிப்புகளையும், உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் என்பதால், அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக வேண்டும்.

கோவிட் தொற்று நோய் வந்தபோது அதனை எதிர்கொள்ள உலகம் தயாராக இல்லை. அதன் காரணமாக அது மிகப் பெரிய சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. புதிய தொற்றுநோயும் வீழ்த்தக் கூடியதாக இருக்காது. அது நமது கதவை தட்டப் போகிறது. நாம் செய்ய வேண்டியவற்றைச் செய்யாவிட்டால் அது நடக்கும். இப்போதே நாம் செய்யாவிட்டால், பிறகு எப்போது?” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்