சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இ காஷ்மீரை அமைதியின் கோட்டையாகக் காட்ட இந்தியா முயற்சித்துள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான ஜி-20 தலைவர் பதவியை வகிக்கும் இந்தியா, காஷ்மீர் -ஸ்ரீநகரில் சுற்றுலா பணிக்குழு கூட்டத்தை நடத்தியது. ஜி-20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
காஷ்மீரின் சுற்றுலாவை மையமாகக் கொண்டு இந்த மாநாட்டை நடத்தியமை என்பது அர்த்தமுள்ளதான விடயமாகவே அமைகிறது.
ஏனெனில் இந்த பகுதி இயற்கை அழகுக்காக மிகவும் பிரபலமானது. பெரும்பாலும் காஷ;மீரை ‘பூமியின் சொர்க்கம்’ என்றும் அழைக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, காஷ்மீரில் நீண்டகாலமாக நிலவும் பிராந்திய மோதல்களினால் அங்கு அமைதி சொர்க்க கதசை தாண்டி சென்றிருந்தது.
இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் முழுவதையும் உரிமை கொண்டாடுகின்ற நிலையில் இரு நாடுகளுமே அதன் பகுதிகளை நிர்வகிக்கின்றன.
இந்த கொந்தளிப்பில் உள்ள அண்டை நாடுகள் சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் பல போர்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீநகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன.
சர்ச்சைக்குரிய பிரதேசத்தில் எந்த விதமான கூட்டத்தையும் நடத்துவதை எதிர்ப்பதாகக் கூறி இந்த மாநாட்டை சீனா புறக்கணித்தது.
சவுதி அரேபியா, ஓமன், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் கூட்டத்தில் பங்கேற்க மறுத்தன. ஜி-20 இன் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், ஓமன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்புகளையே பெற்றிருந்தன.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற இந்தியாவின் குடியரசு தின நிகழ்வில் எகிப்தின் ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இந்தியாவிற்கும் எகிப்திற்கும் இடையிலான இருதரப்பு உறவு ‘மூலோபாய கூட்டாண்மை’ நிலைக்கு உயர்த்தும் வகையில் எகிப்து ஜனாதிபதியின் இந்திய விஜயம் அமைந்திருந்தது.
ஆனால் உத்தியோகபூர்வ புறக்கணிப்பு இருந்தபோதிலும், ஜி-20 சுற்றுலா கூட்டத்தில் கலந்துகொள்ள சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வர்த்தக பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். மேலும் ஜி-20 அமைப்பின் உறுப்பினராக இல்லாத பாகிஸ்தான், இந்த மாநாடு சட்டவிரோதமானது என்றும், சர்ச்சைக்குரிய பிராந்தியத்தின் மீதான தனது கட்டுப்பாட்டின் மீது சட்டப்பூர்வ உரிமையைப் பெற இந்தியா மேற்கொண்ட முயற்சி என்றும் கடுமையாக சாடியது.
ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு பிரதேசங்களையும் கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கு பின்னர், காஷ்மீரில் நடைபெறும் முதல் உயர்மட்ட சர்வதேச கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு – காஷ்மீருக்கு ஓரளவு சுயாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் 370 சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு, இப்பகுதி ஒரு யூனியன் பிரதேசமாக இந்திய மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.
டெல்லியின் இந்த முடிவைத் தொடர்ந்து பெரும் சர்ச்சைகள் வெடித்தன. இந்தியா முழுவதும் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் இந்த நடவடிக்கை நாட்டிற்குள் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சட்டப்பிரிவு 370 ஐ இரத்து செய்வதற்கான அதன் முடிவு வெற்றியடைந்தது என்ற உண்மையை இந்தியா தற்போது நிறுவ விரும்புகிறது.
அதாவது, 1989 ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பகுதியில் காணப்பட்ட மிகவும் அமைதியான நாட்களை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே மாற்றத்தின் பின்னணியில் உள்ள பிரதான காரணமாகும். காஷ்மீரில் இவ்வாறா உயர்மட்ட மாநாட்டை நடத்துவதன் மூலம் உலகிற்கு செய்தி ஒன்றை வழங்கியுள்ளது. இங்கு சாதாரண சூழ்நிலையில் கூட பாதுகாப்புப் பணியாளர்களுக்கு ஒரு சவால்கள் இருக்கின்ற நிலையில், உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரங்களைச் சேர்ந்த நாடுகளின் பிரதிநிதிகள் கூடும் ஒரு மாநாட்டை நடத்துவது சாத்தியம் என்றால், அது காஷ்மீரின் நிலைமை மேம்பட்டுள்ளது என்பதையே குறிக்கிறது.
ஜி-20 கூட்டம் காஷ்மீரின் நற்பெயரை மீண்டும் நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாகும். ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ‘போலோ வியூ சந்தையில்’ சில முக்கிய உள்ளூர் வணிகங்கள் அமைந்துள்ளன. 1954ல் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்த வர்த்தக நிலையங்களில் மீண்டும் வர்த்தக நடவடிக்கைளை ஆரம்பிப்பதற்கான இடமாகவே இந்த சந்தை வளாகம் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளை கவரும் மற்றுமொரு பகுதியாகும்.
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால், உள்ளூர் மக்களிடையே கூட புதுவித நம்பிக்கைகளை தோற்றுவித்துள்ளன. அதே போன்று ஜி-20 மாநாட்டு ஏற்பாடுகள் ஸ்ரீநகர் முழுக்க பிரமாண்டமாக முன்னெடுக்கப்பட்டமையானது மக்கள் மனங்களிலும் சாதமான மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன.
மேலும் ஜி-20 மாநாட்டை மையப்படுத்திய, பிரமாண்டமான ஏற்பாட்டு செயல்முறையில் உள்ளூர் மக்களுக்கு கிடைத்த தற்காலிக வேலைவாய்ப்புகள், தால் ஏரியை பார்வையிட வந்த பிரதிநிதிகள் மற்றும் காஷ்மீரை திரைப்பட படப்பிடிப்புக்கான இடமாக மாற்றியமைத்தமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மாற்றத்தின் பிரதிபளிப்புகளாக அமைந்துள்ளன.
சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்டதை இந்திய அரசாங்கத்திற்கும் – காஷ்மீருக்கும் ஒரு வெற்றிக் கதையாக நிலைநிறுத்துவதற்கான சட்டபூர்வ அணுகுமுறையாகவே காணப்படுகின்றன. உள்ளூர் மக்களைப் பொறுத்தவரை, ஜி-20 கூட்டம் உளவியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருகிறது. பிராந்தியம் இயல்புநிலையை அடைவதற்கான வாய்ப்பைக் கொடுப்பது என்பது மிகப்பெரிய தார்மீக பொறுப்பாகும்.
காஷ்மீர் மக்கள் யாரும் மோதலையோ போரையோ விரும்புவதில்லை. இப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட துருப்புக்கள் கூட தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல விரும்புகிறார்கள். ஜி-20 மாநாட்டை எந்தவித இடையூறும் இல்லாமல் நடத்துவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அண்டை நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் வலுவான செய்தியை இந்தியா கூறியுள்ளது. ஆனால் இந்த நிகழ்வுகள் காஷ்மீரின் நிலைமையில் ஏதேனும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது இளைய தலைமுறையினருக்கு ஒரு புதிய தொடக்கத்தை அறிவிக்குமா என்பதை காலம் மட்டுமே தீர்மானிக்கும். எவ்வாறாயினும் இது சரியான திசையை நோக்கிய இந்தியாவின் பார்வை என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.