தையிட்டி விகாரை விவகாரம்: கைது செய்யப்பட்ட 9 பேரும் பிணையில் விடுதலை

133 0

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கைது செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்றைய தினம் (23.05.2023) போராட்டத்தில் ஈடுபட்ட போது, போராட்டம் நடத்த நீதிமன்றம் தடைவிதித்ததாக தெரிவித்து, பொலிஸார், போராட்டக்காரர்களை கைது செய்ததோடு நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனை பலவந்தமாக தூக்கிச் சென்றனர்.

கைதானவர்கள் சார்பில் 15 சட்டத்தரணிகள் முன்னிலையாயுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட 9 பேரையும் இன்றைய தினம் (24.05.2023) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது கைதானவர்களை விளக்கமறியலில் வைக்க பொலிஸார் கோரிய போதும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணிகள் அதை எதிர்த்தனர்.

இன்றைய தினம் 2.30 மணிக்கு மீண்டும் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, கைதானவர்களை பிணையில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை தடுக்க முடியாதென்றும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.