ஜனக ரத்நாயக்கவுக்கு எம்மால் நற்சான்றிதழ் வழங்க முடியாது

92 0

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தொடர்பில் எம்மால் நற்சான்றிதழ் வழங்க முடியாது. அவர் ராஜபக்ஷர்களுக்கு சார்பாகவே செயற்பட்டார்.

தற்போது எமக்கு நபர் முக்கியமல்ல,ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதே முக்கியமானது.

அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்துக்கு ஜனக ரத்நாயக்க தடையாக இருந்ததால் இன்று ஆளும் தரப்பினர் அவரை வெறுக்கிறார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி  நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி விலகுமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

அரசியல் அழுத்தத்துக்கு மத்தியில் தான் உறுப்பினர்கள் பதவி விலகினார்கள்.இதனை தொடர்ந்தே ஜனக  ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஜனக ரத்நாயக்கவுக்கு நாங்கள் நற்சான்றிதழ் வழங்க போவதில்லை. இவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நிதி நிறுவனங்களின் தலைவர், பிரதானியாக பதவி வகித்தார்.

அதன் வழக்கத்தில் தான் கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் தான் ஜனக ரத்நாயக்கவை ‘மைக் டைசன்’ என புகழ்பாடி கொண்டு வந்தார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைய மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை.

வழமை போல் பதவி விலகுமாறு அரசாங்கம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழுத்தம் பிரயோகித்தது.இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் ஒருசில உறுப்பினர்கள் பதவி விலகினார்கள்.ஆனால் தலைவர் பதவி வகித்த ஜனக ரத்நாயக்க மாத்திரம் பதவி விலகவில்லை.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகினார்கள் என அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பதவி வகித்த சார்ள்ஸ் கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார்.சுய விருப்பத்தின் அடிப்படையில் பதவி விலகியாக குறிப்பிட்டார்.

ஆனால் தற்போது அவர் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.ஆகவே இது எவ்வகையான அரசியல் என்பதை அரசியல் ஞானம் உள்ளவர்கள் நன்கு அறிவார்கள்.

மின்கட்டண அதிகரிப்புக்கு  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கும் போது ஆணைக்குழுவின் தலைவர் மாத்திரம் எதிர்ப்பு தெரிவித்தார் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவித்தார்.

2002 ஆம் ஆண்டு தனக்கு ஆதரவாக செயற்பட்ட டக்லஸ் நாணக்கார என்பரை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தார்.இதன் பின்னரே மின்கட்டணத்தை அதிகரிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியது.

ஜனக ரத்நாயக்க என்ற தனிநபர் தொடர்பில் எமக்கு எந்த கருத்தையும் குறிப்பிட முடியாது.ஆனால் சுயாதீன ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு அமைய செயற்பட முடியாது.ஆகவே  சுயாதீன ஆணைக்குழுக்களை  பாதுகாப்பதற்காக ஜனக ரத்நாயக்கவின் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகவே செயற்படுவோம் என்றார்.