யாழ். மாணவர்கள் படுகொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு!

263 0

கடந்த வருடம் சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் வழக்கு விசாரணையை வடக்கு-கிழக்கு மாகாணங்களிற்கு வெளியே மாற்றுமாறுகோரி ஐந்து காவல்துறையினரும் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு மீதான விசாரணைக்குத் தீர்ப்பு அளிக்கப்படும்வரையில், யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் தமது வழக்கின் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு மேன்முறையீட்டு நீதிபதிகளான விஜித் மலல்கொட, துரைராஜா ஆகியோரைக் கொண்ட அமர்வானது அரசாங்கத் தரப்பு பதிலளிப்பதற்காக எதிர்வரும் 6ஆம் நாள் வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.

விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கடந்த ஆண்டு ஓக்ரோபர் மாதம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் வைத்து சிறீலங்கா காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து காவல்துறையினரும் தற்போது அனுராதபுரச் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்களது வழக்கிற்காக அனுராதபுரத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமது வழக்கை வடக்குக் கிழக்கிற்கு வெளியே மாற்றுமாறு கோரி குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.