தங்கத்துடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும்

122 0

3 கிலோ தங்கத்துடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொண்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமள்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) பந்தய சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையில்,

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் 3 கிலோ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்திருக்கிறது.

அதனால் இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணை மேற்கொண்டு சட்டத்தை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன் இந்த விசாரணைகளில் அரசியல் தலையீடு மேற்கொள்ள இடமளிக்க வேண்டாம் என கேட்கின்றேன். ஏனெனில் இந்த சம்பவம் பாராளுமன்றத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராகவே விரல் நீட்டப்படுகிறது.

அதனால் கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதுபோன்று. இந்த சம்பவம் தொடர்பாகவும் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள இடமளிக்காது, சட்டத்தை முறையாக நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இதன்போது விவாதத்தில் உரையாற்ற ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு. உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என்றார்.