மக்கள் கடந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த போது ஊழல் பேர்வழிகள் ஒழிக்கப்பட வேண்டும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். ஊழல் மோசடிகளே ஆட்சி கலைக்கப்படவும் காரணமாக அமைந்தன. ஆயினும் ஊழல் மோசடிகள் கட்டுக்கடங்கியுள்ளனவா? இல்லை முற்றாக ஒழிக்கப்படுமா ? என்பது தான் அனைவர் முன்னும் எழுந்துள்ள கேள்வி.
வளர்முக நாடுகளில் ஊழல்கள், நிதி மோசடி என்பன சர்வ சாதாரணமாக தொடர்ந்து வருகின்றன. மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து அரசியல்வாதிகளும் சரி அவர்களின் உதவியாளர்களும் சரி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அப்பாவி மக்கள் மாத்திரமே தொடர்ந்து ஏமாளிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
நாட்டில் ஊழல் முற்றாக ஒழிக்கப்படும், ஊழல்வாதிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் அவ்வப்போது வாரி வழங்குகின்ற போதிலும் நடைமுறையில் அவற்றைக் காண முடியவில்லை. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை அனைத்து மட்டங்களிலும் ஊழல் தலை விரித்தாடுவதையே காண முடிவதாக மக்கள் புலம்புகின்றனர்.
நமது அயல் நாடான இந்தியாவிலும் கூட ஊழல்கள் மற்றும் பணத்தை பதுக்கி வைத்தல், கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடல் என்பன பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன. அதன் காரணமாகவே இந்திய அரசு பல தடவைகள் நாணயத்தாள்களை இரத்து செய்து புதிய தாள்களை அச்சிட்டது. தற்போது கூட 2,000 ரூபா நாணயத்தாள்களை இரத்து செய்து அதற்கு பதிலாக புதிய தாள்களை அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒரு கடினமான பயிற்சியாக இருந்தபோதிலும் ஊழல் மோசடிகளை ஒழிக்க ,சட்டவிரோத பண மோசடிகளை கட்டுப்படுத்த இது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இலங்கையிலும் அண்மையில் 5,000 ரூபா கள்ள நாணய தாள்கள் புழக்கத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வளர்முக மற்றும் வறிய நாடுகளில் ஒருபுறம் ஊழல் மறுபுறம் மோசடி என தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
இலங்கையை பொறுத்த மட்டில் எந்த ஒரு வேலையை செய்ய வேண்டி இருப்பினும் அதனை நிறைவேற்ற சில அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்க வேண்டியவர்களாக மக்கள் காணப்படுகின்றனர். அதனால் அரச சேவைகளை சாதாரண மக்கள் இலகுவில் மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே பொதுவான குற்றச்சாட்டாகும்.
குறிப்பாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய போது மக்கள் பட்ட கஷ்டங்களை மறந்திருக்க மாட்டார்கள். ஒரு லிற்றர் பெட்ரோல் பெற நாள் கணக்கில் மக்கள் வரிசையில் காத்திருந்தனர். முடியாத கட்டத்தில் எரிபொருளை பெற ஒரு சில முகவர்களுக்கு மேலதிகமாக பணம் கொடுக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். பணம் கொடுத்தால் மட்டுமே வரிசைகளில்முதலில் இடம் பிடிக்க முடியும். அதை தொடர்ந்து எரிபொருளுக்கான கியூ . ஆர் . முறைமை அமுலுக்கு வந்ததும் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்தது.
கியூ .ஆர் .முறைமை அமுலுக்கு வந்த பின்னரும் அதற்கு மேலதிகமாக எரிபொருளை பெற சிலர் இன்றும் கையூட்டு வழங்கி பெற்றுக்கொள்வதாக மக்கள் கூறுகின்றனர். எந்த ஒரு பொருளுக்கு தட்டுப்பாடும், கிராக்கியும் நிலவுகின்றதோ அதனைப் பெற சட்டவிரோத நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்ற விசித்திரமான நிலைமையே இன்று காணப்படுகின்றது.
அதேபோன்று அரசாங்கம் ஒரு சில அத்தியாவசிய பொருட்களுக்கு மக்களின் நலனை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்தாலும் ஒரு சில வர்த்தகர்கள் அத்தனையும் மீறி தங்கள் மனம் போன போக்கிலேயே விற்பனை செய்கின்றனர். உதாரணமாக முட்டையை குறிப்பிடலாம்.
அரசாங்கம் முட்டை ஒன்று 45 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட போதிலும் ஒருசில கடைகளில் முட்டை ஒன்று 55 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
அதற்கான பிரதான காரணம் அரசின் அறிவித்தல்களை கவனத்திற் கொள்ளாமல் விடுவதும், குறித்த விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் அவற்றை கண்டுக் கொள்ளாதிருப்பதும் மற்றும் மோசடிகளுக்கு துணை போவதும் என கூறப்படுகிறது. மேலும் விலை உயர்வுகளை உடனடியாக அமுல்படுத்தும் வர்த்தகர்கள், அது குறைவடையும் போது அதனை நடைமுறைப்படுத்த தவறிவிடுகின்றனர். அது மட்டுமன்றி இன்று சந்தையில் தூய பொருட்களை பெற முடியாமல் கலப்படங்கள் காணப்படுகின்றன.
அத்துடன் நாட்டு மக்களின் பிரதான நுகர்வு பொருளான அரிசியை உரிய விலையில் பெற முடியாதுள்ளது. அரசாங்கம் கூட இந்த விடயத்தில் பெரும் தடுமாற்றத்தில் உள்ளதையே காணமுடிகின்றது. அதற்கான பிரதான காரணம், அரிசி விற்பனை, இடைத்தரகர்களினதும், பெரும் பண முதலைகளினதும் பிடியில் இருப்பதுடன் அவர்கள் அதில் ஏகபோக உரிமை செலுத்துவதேயாகும்.
இவ்வாறு வர்த்தக மட்டங்களிலும் ஊழல்களும், மோசடிகளும் அரங்கேறி வரும் நிலையில் அரச சேவைகளை எடுத்துக்கொண்டால், அங்கும் பல்வேறு ஊழல்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக கடவுச்சீட்டு பெறுவது. பாடசாலைகளில் முதலாம் ஆண்டுக்கான அனுமதி பெறுவது என அனைத்து மட்டங்களிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.
கடவுச்சீட்டுக்களை பெறுவது, வாகன உரிம பத்திரங்களைப் பெறுவது போன்ற செயல்பாடுகளின்போது இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களின் தொல்லைக்கு மக்கள் ஆளாக நேரிடுகிறது. இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. அத்துடன் பெரும்தொகை பணத்தையும் இழந்து வருகின்றனர். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தொகையான மக்கள் இடம் பெயர்கின்றனர்.
இந்நிலையில், வரிசையில் நிற்காது கடவுச்சீட்டுக்களை பெற்றுத்தருவதாக கூறி ஒரு தரப்பினர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறைகேடான செயற்பாட்டுடன் திணைக்கள அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும், அது தொடர்பில் திணைக்கள மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பமாக உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
வரிசையில் நில்லாமல் கடவுச்சீட்டு பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்த 16 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்திலிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டை முறையற்ற வகையில் பெரும் பொருட்டு ஒருவர் 10 ஆயிரம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை செலவிட வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. மாறாக கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள இலகுவான வழி காணப்படுமிடத்து ஊழல்,மோசடிகள் இடம்பெற ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதே பிரதானமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
அடுத்து பிரதானமாக கவனிக்கப்பட வேண்டியது அபிவிருத்தி மற்றம் முதலீடுகளாகும். முக்கியமாக வீதி அபிவிருத்தி தொடக்கம் வீடமைப்பு திட்டங்கள் வரை பல்வேறு மட்டங்களில் ஊழல்கள் மோசடிகள் இடம்பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பல வீதிகள் இன்று அரையும் குறையுமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. எனினும் அதற்கான நிதி செலுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வகையான ஊழல்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிலர் உட்பட பலருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் பெருமளவு தரகு பணம் பெறப்படுவதாகும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
பாராளுமன்றத்தில் அண்மையில் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ,எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கை தடுப்பதற்காக ஒருவர் 8000 ஆயிரம் கோடி ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டதாக அறியப்படுகிறது. எனவே பொலிஸார் தான் உண்மையை கண்டறிய வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்த போது ஊழல் பேர்வழிகள் ஒழிக்கப்பட வேண்டும் அவர்கள் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர். ஊழல் மோசடிகளே ஆட்சி கலைக்கப்படவும் காரணமாக அமைந்தது. ஆயினும் ஊழல் மோசடிகள் கட்டுக்கடங்கியுள்ளனவா? இல்லை முற்றாக ஒழிக்கப்படுமா? என்பது தான் அனைவர் முன்னும் எழுந்துள்ள கேள்வி.
ஆர். பி . என்