எல்லை தாண்டிச் சென்று இந்திய கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் ஐந்து பேரை இந்திய கடலோர காவல் படையினர் நேற்று திங்கட்கிழமை (22) கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவின் தூத்துக்குடியை சேர்ந்த இந்திய கடலோர காவல் படையினர் நேற்று மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்திய கடல் எல்லைக்குள் 60 மைல் நாட்டிகல் தூரம் இலங்கையைச் சேர்ந்த படகில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து உடனடியாக கடலோர காவல் படையினர் விரைந்து சென்று, அந்த படகை மடக்கிப் பிடித்தனர்.
அப்போது IMUL A-0635-NBO என்ற அந்த படகில் நீர்கொழும்பை சேர்ந்த விக்டர் இம்மானுவேல், ரஞ்சித், அண்டனி ஜெயராஜ் குரூஸ், பெனில் மற்றும் படகு ஓட்டுநர் ஆனந்தகுமார் ஆகிய 5 மீனவர்கள் இருந்துள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக அந்த 5 மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினர் கைதுசெய்து, படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதனையடுத்து, படகையும் 5 மீனவர்களையும் கடலோர காவல் படையினர் தங்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி, தருவைகுளம் கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில், குறித்த 5 மீனவர்களிடமும் பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக தருவைகுளம் கடலோர பாதுகாப்பு பொலிஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்ட 5 மீனவர்களும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்படுவர் என அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனா்.