பாராளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்!

95 0

பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட குஷானி ரோஹணதீர இன்று (23) காலை தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய பதவியில் தனது கடமைகளை பொறுப்பேற்பதற்காக இன்று காலை பாராளுமன்றத்துக்கு வருகை தந்த ரோஹணதீரவை பாராளுமன்ற உதவிச் செயலாளர்களான டிக்கிரி கே.ஜயதிலக மற்றும் ஹங்ச அபேரத்ன ஆகியோர் வரவேற்றனர்.

சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் புதிய செயலாளர் நாயகம் பதவிச் சத்தியம் செய்துகொண்டதுடன், மகா சங்கத்தினர் ஆசீர்வதித்து மத அனுஷ்டானங்களை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டு, சபாநாயகரினால் சான்றுரைப்படுத்தப்படவுள்ள ரத்தனதிஸ்ஸ அறக்கட்டளை (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் உண்மைப் பிரதியில் கையொப்பமிட்டு அவர் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, குஷானி ரோஹணதீரவின் குடும்ப உறுப்பினர்கள், பாராளுமன்ற திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இச்சந்தர்ப்பத்தில் பங்கேற்றிருந்தனர்.

நேற்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்போது படைக்கல சேவிதர் முன்செல்ல சபாநாயகர், செயலாளர் நாயகம் உள்ளிட்ட செயலாளர்கள் குழுவினர் சபா மண்டபத்துக்குள் வருகை தந்தனர்.

பின்னர், அரசியலமைப்பின் 65(1)ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், ஜனாதிபதியினால்  பாராளுமன்ற பணியாட்டொகுதிப் பிரதானியாகவும் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமாக பதவி வகித்த குஷானி அனுஷா ரோஹணதீர 2023 மே 23ஆம் திகதி முதல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

அத்துடன், பாராளுமன்ற செயலாளர் நாயகமாக பதவி வகித்த தம்மிக தசநாயக்க  2023 மே 23ஆம் திகதி முதல் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் என்பதையும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.