அம்பாறையில் குரங்குகளின் தொல்லையால் விவசாயம் பாதிப்பு – விவசாயிகள் கவலை

83 0

குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினந்தோறும்  எதிர்கொண்டு வருவதாக  கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில்,  மக்கள் நடமாடும் இடங்களில் தினமும் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக நடமாடுவதாகவும், இதன்போது பொது மக்களுக்கு அவை தொல்லை தருவதாகவும் அப்பிரதேசங்களை சேர்ந்தவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

அத்தோடு குரங்குகள் ஏற்படுத்தும் இடையூறுகளை தீர்க்கவும், குரங்குகளின் அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உரிய  அதிகாரிகளால்  இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டினையும் அவர்கள்   முன்வைக்கின்றனர்.

இது தொடர்பில் மக்கள் மேலும் கூறுகையில்,

அம்பாறை மாவட்டத்தில் சவளக்கடை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மத்திய முகாம், சொறிக்கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பளம், ஒலுவில், வளத்தாபிட்டி, அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், இறக்காமம் ஆகிய பகுதிகளில்  உள்ள விவசாய நிலங்களில் விதைக்கப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி, வியாபார கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி, விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களை  உண்டு வியாபார நடவடிக்கைகளுக்கு குரங்குகள் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

குரங்குகள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் சஞ்சாரம் செய்து, அவ்வழியில் செல்கின்ற பாதசாரிகள் மற்றும் பயணிக்கும் வாகனங்களையும் இடைமறிக்கின்றன. இதனால் நிறைய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

வீதியில் நாங்கள் பொருட்களை எடுத்துச் செல்லும்போது, கைகளில் வைத்திருக்கும் உணவுப் பொதிகளை பிடுங்கிச் செல்கின்றன.

குரங்குகளின் அட்டகாசத்தால் பல பகுதிகளிலும் மாணவர்கள் பெரும் அச்சத்துடனேயே பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கின்றனர்.

வீடுகளின் வாசற்பகுதிகளில் ஆடைகளை உலரவிடும்போது குரங்குகள் அவற்றையும் கொண்டுசென்றுவிடுகின்றன. இதனால் வீடுகளில் வசிப்பவர்களும் பாடசாலைக்குச் செல்லும்  பிள்ளைகளும் சிரமப்படுகின்றனர்.

அம்பாறையின் உகண, தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள், பேருந்துகளில் ஏறி குரங்குகள் அட்டகாசம் செய்வதால் வாகன சாரதிகளும் பயணிகளும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

அம்பாறையின் புற நகரங்களை அண்டிய மலைப் பிரதேசங்களில் உள்ள மலைப்பாங்கான இடங்களில் உள்ள குரங்குகள் அடிக்கடி  ஊருக்குள் நுழைந்து தொல்லை கொடுக்கின்றன என கூறுகின்றனர்.

குரங்குகளால் ஏற்படும் இப்பிரச்சினைகளால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் தினமும் பல்வேறு சிரமங்களுக்கு தினமும் முகங்கொடுத்து வருகின்றனர்.

அம்பாறையில் 300க்கும் மேற்பட்ட குரங்குகள்  மனித நடமாட்டமுள்ள இடங்களில் சுற்றித் திரிவதால், குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன், குரங்குகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் விவசாயத்தையே  கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குரங்குகளால் ஒவ்வொரு வருடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மில்லியன்கணக்கில் தாம் நஷ்டமடைவதாகவும்,  குரங்குகளின் நடமாட்டத்தால் விவசாய நிலங்கள்  தரிசு நிலங்களாக மாறியுள்ளதாகவும் விவசாயிகள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

அது மட்டுமன்றி, குரங்குகள் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை உண்பதுடன், பயிர்களை  முழுவதுமாக அழித்துவிடுவதே அப்பகுதி விவசாயிகளின் பெரும் பிரச்சினையாக காணப்படுகிறது.

மேலும், நகரங்களில் முறையாக அகற்றப்படாத  திண்மக் கழிவுகளை சாப்பிட்டு, அதிக  எண்ணிக்கையில் குரங்குகள் பெருகி வருகின்றன. இதனால் அக்குரங்குகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாப்பது சிரமமாக உள்ளதால் சில விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை கைவிட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அம்பாறையின் மலைப்பாங்கான இடங்களில் உள்ள குரங்குகள் ஊருக்குள் வந்து செல்வதால், அப்பகுதி மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு பொலிஸார் மற்றும் வன அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு  அந்த மக்கள் கோரியுள்ளனர்.

நாட்டில் குரங்குகளால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வரும் இச்சூழலிலேயே சர்வதேச குரங்குகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 14ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமன்றி, சமீபகாலமாக குரங்குகள் நாட்டின் அரசியல் விவகாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளன.

அத்துடன், இலங்கையில் அதிகரித்து வருகின்ற குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் குரங்குத் தொல்லைகளை ஒழிப்பது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு காணொளிகள், கருத்துப் பதிவுகள் வைரலாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.