புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகள் அளவீடு செய்யப்பட்டன

300 0

மட்டக்களப்பு – ஏறாவூர், புன்னக்குடாவில் அரசாங்கக் காணிகளை அளவிடும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

புன்னக்குடா பகுதியில் அரச காணிகள் சட்ட விரோதமாக சிலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த அளவீடு முன்னெடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளால் புன்னக்குடாவில் அரச காணிகள் சிலருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை அடுத்து பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கமைய, புன்னக்குடாவிலுள்ள அனைத்து அரச காணிகளையும் அளவீடு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், நில அளவை அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் காணி அளவீடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி புன்னக்குடா பகுதியில் அத்துமீறி காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கையை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் தடுத்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.