முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 14ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு 20.05 2023 நேற்று றணஸ் நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது.
இந் நிகழ்வானது முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு ஈகைச்சுடரேற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டதோடு, மக்கள்
சுடரேற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மேடை நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் மண்ணில் எம் மக்கள் பட்ட துன்பங்களை வெளிப்படுத்தும் கவிதைகள், எழுச்சி நடனங்கள், பேச்சுகள், எழுச்சிப் பாடல்கள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன. அத்தோடு இன்றைய நாள் ஆற்றல் மிக்க, ஆளுமைமிக்க இலட்சிய போராளி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு நாள் என்பதால் அவருடைய நினைவாக தேசியத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை வாசிக்கப்பட்து என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருக்க இடமின்றி, உண்ண உணவு இன்றி, மருத்துவ உதவிகள் இன்றி, மரங்களின் கீழும் வீதியோரங்களிலும் அவலங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்த எம் மக்களை, தொடர்ச்சியான விமானத்தாக்குதல், எறிகணைத் தாக்குதல், இராசயன எரிகுண்டுத்தாக்குதல் என இலங்கை அரச படைகளினால் திட்டமிட்டு இனப் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வளவு அவலங்களிற்குப் பின்னால் நாம் சோர்ந்து போகாமல், எமக்கான விடுதலையை பெற்றுக்கொள்வதற்கு நாம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களின் தேசம் விடுதலை பெறும்வரை ஓய்ந்து போகாமல் அனைவரும் ஒன்றிணைந்து எமது விடுதலைப்பயணத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என உறுதியேற்கப்பட்டு, இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு அதன்பின் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.