ரயில் கடவை கோரி பிரதேச மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் காரணமாக வவுனியா ஓமந்தை ரயில் பாதையின் நவீனமயமாக்கல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த ஒப்பந்ததாரருக்கு நாளொன்றுக்கு 10,000 டொலர்களை வீணாகச் செலுத்த வேண்டியுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் ரயில் கடவைகோரி கிராம மக்கள் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் வவுனியா மற்றும் மதவாச்சிக்கு இடையில் ரயில் பாதையை நவீனமயப்படுத்தும் பணிகள் தடைப்பட்டுள்ளன.
மஹவ தொடக்கம் வவுனியா வரையிலான ரயில் பயண வேக வரம்பை அதிகரிப்பதற்காக, பழைய ரயில் பாதைக்குப் பதிலாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரயில் பாதைகள் அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.