குப்பி விளக்கு தீப்பற்றியதால் ஓலை வீடொன்றின் ஒரு பகுதியும், அவ்வீட்டில் இருந்த புடவைகள், முக்கிய ஆவணங்கள், 45 ஆயிரம் ரூபாய் பணம் என்பன எரிந்துபோன சம்பவம் புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (19) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக விசுவமடு மேற்கு கிராம அலுவலருக்கு அறிவித்த போதிலும், கிராம சேவையாளர் வந்து தீயினால் சேதமடைந்த வீட்டை பார்வையிடவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதனையடுத்து, தீ விபத்தினால் வீடு பகுதியளவிலும், வீட்டின் சில உடைமைகள் முற்றாகவும் எரிந்துபோனமை தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சம்பவ தினத்துக்கு மறுநாள் சனிக்கிழமை (20) முறைப்பாடு பதிவு செய்தும், புதுக்குடியிருப்பு பொலிஸாரும் இவ்விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை எனவும் தற்போது தாம் தங்க இடமின்றி, அயல் வீட்டில் தங்கியிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடந்த தீ விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் இயங்கிவரும் பொதுநல அமைப்புக்கள் மற்றும் வீட்டு உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.